டெல்லி, ஏப்ரல் 5 : மத்திய அரசுக்கும், பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் தெரியாமல் தரைப்படையின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியான செய்தி தேசிய அரசியலை மிகவும் உலுக்கியுள்ளது பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் ஆகியோர் செய்தி ஆதாரமற்றது, பொய்யானது என விளக்கமளித்தாலும் மர்மம் இதுவரை விலகவில்லை.
பாதுகாப்பு செயலாளரையும், ராணுவ துணைத் தலைவரையும் பாராளுமன்ற நிலைக்குழு விசாரித்தது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி பதவி விலகவேண்டும் என்று பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளது.
பிறந்த நாள் தேதி குறித்த சர்ச்சையில் தரைப்படை தலைமை தளபதி வி.கே.சிங் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகியதற்கு அடுத்த நாள் ஜனவரி மாதம் 16-ஆம் தேதிக்கும், 17-ஆம் தேதிக்கும் இடையில் ராணுவத்தின் 2 யூனிட்டுகள் டெல்லியை நோக்கி முன்னேறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
ஹரியானாவின் ஹிசார் பகுதியில் இருந்த mechanised infantry படையும், ஆக்ராவிலிருந்து Para Brigade படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.
அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லிக்கு வந்திறங்கியது. அந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக ராணுவ பிரிவுகளின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி கூறுகிறது.
ராணுவப் புரட்சி குறித்த செய்தியை பிரதமர் மன்மோகன்சிங் திட்டவட்டமாக மறுத்துள்ளார். குடியரசு தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவரிடம் ராணுவத்தின் புரட்சிக்கான முயற்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் பதிலளிக்கையில், “இந்த செய்தி பீதியைக் கிளப்புவதற்கென்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியை அப்படியே உண்மையென்று கருதத் தேவையில்லை. தளபதி பதவி என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது. அந்தப் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.” என்றார்.
ராணுவப் புரட்சி நடத்த முயற்சி என்ற செய்தி ஆதாரமற்றது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.
விசாகப்பட்டினத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த அவரிடம் செய்தியாளர்கள் இது பற்றி கேள்வி எழுப்பியபோது அவர் கூறியது:
இந்த வித அணிவகுப்பு வாடிக்கையானதுதான். அன்று அசாதாரணமாக எதுவுமே நடக்கவில்லை. நமது ராணுவத்தின் தேசப்பற்று குறித்து எங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்திய ஜனநாயகத்துக்கு ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் அவர்கள் செய்ய மாட்டார்கள். அவர்கள் உண்மையான தேசப் பற்று உள்ளவர்கள். எல்லைப் பகுதியில் தங்கள் உயிரைப் பணயம் வைத்து நம் நாட்டைப் பாதுகாக்கிறார்கள். நமது ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோரக் காவல் படை ஆகியவற்றை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. அவர்களுடைய நாட்டுப்பற்று குறித்து எந்த சந்தேகமோ கேள்வியோ யாருக்கும் எழத் தேவையில்லை. ராணுவப் புரட்சிக்கு முயற்சி நடந்தது என்பது போன்ற செய்தி தவறானது. அதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் நமது பாதுகாப்புப் படைகளின் கௌரவத்துக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் பத்திரிகைகள் நடந்து கொள்ளக் கூடாது என்றார்.
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் பல்லம் ராஜு கூறுகையில், இது போன்ற செய்தி வெளியிடுவது பொறுப்பற்ற செயல் என்றும் தேச நலனுக்கு விரோதமானது என்றும் கூறினார்.
இச்செய்தி குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பது:
அடிப்படையற்ற தகவல். ராணுவப் படையினரின் வழக்கமான இடப்பெயர்வு நடவடிக்கை தான் அன்றும் நடந்துள்ளது. அதை பெரிதுபடுத்தி திரித்து செய்தி வெளியாகியுள்ளது. இந்திய ராணுவம் என்பது பெருமைக்கும், கண்ணியத்துக்கும் உரியது. அரசாங்கத்தின் நிர்வாக விஷயங்களில் எக்காலத்திலும் குறுக்கிடவோ, தலையிடவோ ராணுவத்துக்கு துளி கூட விருப்பம் இருந்ததில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இச்செய்தி குறித்து பாரதீய ஜனதா கட்சி கருத்து தெரிவிக்கையில், ‘இந்த செய்தி குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்திட வேண்டும். ராணுவத்துக்கும், அரசுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்க காரணமே அந்தோணி தான். அவர் பதவி விலக வேண்டும். அதை அவர் செய்யாவிட்டால், பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளது.
நாட்டின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செய்தி வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை சிக்கலில் மாட்டவைத்துள்ள 3-வது சம்பவம் இதுவாகும். முன்னர் பிறந்த தேதி சர்ச்சையில் நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக தரைப்படை தலைமை தளபதி பாதுகாப்பு அமைச்சகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுகினார். தாத்ரா ட்ரக்குகள் வாங்க 14 கோடி ரூபாய் லஞ்சம் அளிக்க முயன்றது குறித்து வி.கே.சிங் செய்தி வெளியிட்டது 2-வது சம்பவமாகும்.
source from: www.mttexpress.com
தொகுப்பு
ரிப்போர்ட்டர் இல்யாஸ், ASNS .அப்துல் பாரி,EKA .முனவ்வர் கான்
இந்தியாவில் புரட்சிக்கு ராணுவம் முயற்சி: நாடு அதிர்ந்தது!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment