முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

உலக பத்திரிகை சுதந்திரம் ஓர் பார்வை..!!!


ஊடகம், மே 05 : ஊடக சுதந்திரம் என்பது ஊடகங்களுக்கான மிரட்டலும், தணிக்கைகளும் இல்லாமல், உண்மையான தகவல்களை வெளியிடுவதற்கான சுதந்திரமாகும். இன்றைய நிலையில் உலகின் பலபாகங்களில் உண்மையான ஊடக சுதந்திரங்கள் வெவ்வேறு பாத்திரங்களை படைத்துவருகின்றன. மேற்கத்திய நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் இந்த ஊடக சுதந்திரம் கட்டுப்பாடுகளற்ற நிலையில் காணப்படுகின்றன, சீனா, ஈரான், வடகொரியா, கியூபா, கிழக்காசியாவிலுள்ள சில நாடுகளில் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அந்த நாடுகளின் அரசுகளின் கையாடல்களுடன் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் ஓரளவுக்கு சுதந்திரமாக செயற்படும் தன்மையும் காணப்படுகிறது. உண்மையில் மனித உரிமைகள் பற்றிய சர்வதேச சாசனத்தினது பிரகடனத்தின் 19வது பிரிவு இவ்வாறு கூறுகின்றது. 'சுதந்திர கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், வெளியிடுவதற்கும், எல்லோருக்கும் உரிமை உண்டு. பிறரின் தடையின்றி தான் ஒரு கருத்தினைக் கொண்டிருப்பதற்கும், தேசங்களின் எல்லைகளைப் பொருட்படுத்தாது எவ்வகையான ஊடகங்களின் மூலமும் தகவல்களைப் பெறுவதற்கும் வழங்குவதற்கும் உரிமையும் இதில் உள்ளடங்குகிறது' என்று அவ்வாசகம் கூறுகிறது.

என்னதான் நவீன ஊடகங்கள் வந்தாலும் ஊடகக்துறையிலேயே முதலிடத்தை வகிப்பது பத்திரிகைத்துறையாகும். அக்காலத்தில் மன்னரிடமிருந்து செய்திகளை நாட்டு மக்களுக்கு அறிவிக்கவும், போர்பிரகடனம் செய்யவும், செய்திகளை பரப்பவும் வேண்டி பல்வேறு யுக்திகள் கையாளப்பட்டு வந்தன. தீமூட்டுதல், புகைவைத்தல், புறாவை தூது அனுப்புதல், குதிரைவீரன், சப்தமிடல் போன்ற பல்வேறு வடிவங்களின் இறுதியாக பின்நாளில் சீனர்களின் காகிதக் கண்டுபிடிப்புக்குப்பிறகு புத்துயிர் பெற்று, அச்சு ஊடகத்தில் பத்திரிகைத்துறையானது வரலாறு படைத்தது. அன்று இலங்கையில் அறிஞர் சித்திலெவ்பையின் 'முஸ்லீம் நேசன்' எனும் பத்திரிகை எழுச்சிபெற்று விளங்கியது. கடந்த காலங்களில் கொழும்பில் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பத்திரிகைத்துறையானது இன்று நாட்டின் மூலை முடுக்கொல்லாம் செய்திப்பத்திரிகைகள் நாட்டு நடப்புக்களையும், மக்களின் பல்வேறு விசயங்களையும் அன்றாட செய்திகளாக வழங்கிவருகின்ற அளவுக்கு மக்களின் மத்தியில் பத்திரிகைத்துறை தனிமுத்திரை பதித்தே வருகின்றது.

வாசிப்பின்மீதான பற்றினை பற்றிக் கொள்வதவற்கும், மொழிரீதியான மேம்பாட்டை வளர்த்துக் கொள்ளவும் பத்திரிகை சிறந்த ஊடகமாக தொழிற்படுகிறது. ஆதலால்தான் மொழியானது ஒருசாதனமாகும் என்பர். அதனை வளப்படுத்தவும், அறிஞர்கள் மட்டுமன்றி, எவரும் தமது எண்ணக்கருவை வெளியிடவும், எழுத்தாக்கம் செய்து மற்றவர்கள் படித்தறிவதற்கும் பத்திரிகை மிகவும் அவசியமானதாக காணப்படுகிறது. என்னதான் பல்வேறு நவீன தொழிற்நுட்ப அறிவு வந்திட்டபோதிலும் பத்திரிகைத் துறை சோர்வடைந்து போகாது தலைநிமிர்ந்தே வலம்வந்து கொண்டிருக்கிற நிலையில் உலக மக்கள் பத்திரிகையின் உயரபிமானத்தை நினைவுபடுத்தும் வகையில் உலகின் பல அமைப்புக்களுக்கும், விசயங்களுக்கும் சர்வதேச தினங்கள் அமைந்துள்ளதுபோல் தகவல்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் பத்திரிகைகளுக்கும் அதன் சுதந்திரமான தன்மைகள் பாதுகாக்கப்படல் வேண்டும் என்கிற நோக்கில் அமைந்ததுதான் இந்த உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகும்.

இன்று மனிதவாழ்வில் இரண்டறக்கலந்துவிட்ட பத்திரிகைகள் உண்ணுகின்ற உணவைப் போன்று மிகவும் முக்கியத்துவம் மிக்கதாக காணப்படுகிறது அதிகாலை மலர்ந்துவிட்டால் இணையத்தில் தேடுகிறோம் பத்திரிகையை. இணையம் இல்லாதவர்கள் தொலைக்காட்சி, வானொலி போன்றவற்றில் செய்தித் தலைப்புக்களையாவது அலுவலகம் செல்வதற்கு முன்னர் பார்த்து விட்டு செல்வதில் மிகவும் ஆர்வமாய் இருக்கின்றனர். இதற்குக் காரணம் நாட்டினதும், உலகினதும் நடப்புக்களை அறிந்து கொள்வதற்கேயாகும். அதுமட்டுமன்றி உலகின் ஒவ்வொரு காட்சிகளை புதிய புதிய விசயங்களுக்கு, நிகழ்வுகளும், மாற்றங்களும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இதனை சுடச்சுட அறிவதில் அதிக ஆர்வம் கொள்கின்ற ஒருநிலைமைக்கு இன்றைய மக்கள் சிந்தனை அறிவியியல் ரீதியிலமைந்த போக்குக்கு உட்பட்டுள்ளமையினாலாகும்.

பொதுவாக பத்திரிகையின் பிரதான தொழிற்பாடாக பல்வேறு கோணங்களில் இருந்து செய்திகளை ஒன்றுதிரட்டி தன்னுடைய வாசகர்களின் உள்ளத்தைக் கொள்ளையிட முனைகின்றன. பள்ளி செல்லும் மாணவர்கள் தொடக்கம் வயதுமுதிர்ந்த கிழடுகள் வரைக்கும் பத்திரிகையை வாசித்து மகிழ்வர். தினசரி, வாராந்தம், மாதாந்தம், காலாண்டு எனப்பல பிரிவுகளாக பத்திரிகைகள் வெளியாகின்றன. அந்தவகையில் தேசிய பத்திரிகைகளாக அமைந்த, நாளாந்த பத்திரிகைகளுக்குத்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு அதிகம் கிடைக்கின்ற ஒரு நிலை காணப்படுகிறது. தினசரி நடப்புக்கள் பற்றிய விடயங்களும், அன்றாடம் நடைபெறும் உலக நிகழ்வுகளையும் படம்பிடித்துக் காட்டிம் தினசரிகள் முன்னிலை பெறுகின்றன. இருப்பினும் பொதுவாக வாசிப்பவர்களின் ஆவலைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுவதில் பத்திரிகைகள் மிகவும் அவதானமாக செயற்படுகின்றன. அப்போதுதான் உரிய பத்திரிகையின் மீதான கண்னோட்டத்தில் மக்களும் ஆர்வமாக இருப்பர்.

எமது நாட்டைப்பொறுத்தளவில் ஒருகாலத்தில் யுத்த செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கி வந்த பத்திரிகைகள் இன்று சினிமா, விளையாட்டு, பிரதேசவாரியான அபிவிருத்திச் செய்திகளையும். அரசியல் அலசல்களையும், சுகாதார மற்றும் உடல், உளநல விஞ்ஞான, ஆய்வியல், கல்விப்பகுதி போன்ற இன்னோரன்ன கட்டுரைகளையும் தாங்கிவருகின்ற நிலையில் பத்திரிகைகள் காணப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாப்படும் என்று வாய்கிழிய பேசுகின்ற சிலரது பார்வையில் சில பத்திரிகைகளை மக்கள் கண்டுகொள்ளாததும் கவலைக்குரிய விடயமாகும். நடுநிலைமை வகிக்காது பக்கச்சார்பான பத்திரிகைகள் பலவும் நாட்டுக்குள் உலாவருகிறது. இதனையும் கவனித்து உண்மையான பக்கசார்பற்ற பத்திரிகைளை இனங்காண்பதும் ஒருவகையில் சிறந்தவாசிப்புக்கு தீணியாக அமைகின்றமை நோக்கத்தக்கதாகும்.

எனவேதான் மக்களின் குழப்பத்திற்கு வழிவகுக்கக்கூடிய செய்திகளையும், ஆதாரமற்ற செய்திகளையும், நம்பத்தகுந்த செய்திகளையும் பிரசுரிப்பதனால் மக்களின் மீதான நம்பிக்கை குறைவடைந்து செல்கின்ற பத்திரிகைகளும் எம்மத்தியில் இருந்த இடம் தெரியாது போன சரித்திரமும் நமக்குத் தெரியாததா என்ன? அதேNவைள சில பத்திரிகைகள் உரிய பிரதேசத்தின் செய்திகளை பிரசுரித்து மக்களின் மனங்களில் விரைவில் இடம் பிடிப்பதற்காகவேண்டி பிரதேசத்து முக்கிய புள்ளிகளின் வயிற்றில் புளிக்கரைக்கும் விடயங்களை போட்டு வாங்கிக் கட்டிய சம்பவங்களும் உண்டு. அவ்வாறான பத்திரிகைகள் தம்முடைய சிலநோக்கங்களை அடைந்து கொள்வதற்காக வேண்டிய வெளியிடப்படுகின்றன. எழுதும் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக இல்லாதது பொல்லாதது என எல்லாவற்றையும் அலசுவதும், அதனை பிரசுரிப்பதும் ஆபத்தான விளைவுகளையே தரும். அதேவேளை நாட்டினதும், மக்களினதும் நலன்கருதி செய்திகளை அறியச்செய்வதில் பத்திரிகைகளுக்குள்ள தார்மீகப் பொறுப்புக்களையும் அறிந்து பிரச்சினைகளை உண்டுபண்ணாதவகையில் பிரசுரிப்பதும் அவசியமாகும்.

மறுபக்கம் பார்ப்போமானால் உலகில் உண்மைத்தன்மை மிக்கதான செய்திகளை பிரசுரிக்கின்றபோது செய்தியாளர்களும், பத்திரிகைகளும் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். உலகில் கடந்த பல வருடங்களில் ஆயிரக்கணக்கான பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளளனர். கடந்த 2004ஆம் மட்டும் 129பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அண்மையில்கூட பல பத்திரிகையாளர்கள் இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு வருகின்ற சம்பவங்களும் அதிகரித்துக் காணப்படுகின்ற நிலையில், உண்மையை எழுதுவதற்கு தயங்குகின்றனர். அவர்கள் எழுதியவை, கூறியவை தொடர்பாக ஒருவர் விருப்பம் இல்லாமலிருந்தமையாகும். ஒருவர், ஆராயக்கூடாததை ஆராய்ந்தமையினாலாகும், ஒருவர் ஊடகவியலாளர்களை விரும்பாமையினாலாகும். தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்த காரணத்தினாலாகும். எனவே இந்த பத்திரிகைத்துறையானது மிகவும் ஆபத்தானது என்பது ஒருபுறம் இருப்பினும், ஒருவருக்காக வேண்டி சமுதாயம் பாதிக்கின்ற விடயங்களுக்கு முன்னுரிமைவழங்கி செய்திகள் பிரசுரமாகின்றபோது பிரச்சினைகளும், அடிதடிகளும், உயிராபத்துக்களும், நடைபெறுகின்ற நிலைமைகளை இல்லாதொழிப்பதும், பத்திரிகைச்சுதந்திரத்தை காப்பாற்றுவதற்காக வேண்டியே, அன்று உலகப் பத்திரிகை தொடர்பான பிரகடனம் வழிவகுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தநாளை உலக பத்திரிகைகள் அமைப்பு உலகளாவிய ரீதியில் கொண்டாடி வருகின்றன. உண்மையில் பத்திரிகைகள் சுதந்திரமான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்தி செய்திகளை வெளியிடுகின்ற போதுதான் அவற்றை மக்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கை வீணாகபோகாதவாறு பத்திரிகைதுறை சார்ந்தோருக்கு உயர்விருதுகள் வழங்கப்படுகின்றன. சமூகத்தின் நண்மை கருதி பிரசுரிக்கப்படுகின்ற செய்திகள் மக்கள் சக்தியாக போற்றப்படும். போர்வீரனின் வாளைவிட எழுத்தாளனின் பேணாமுனை வலிமையானது என்பர். சர்வதேச ரீதியிலும் எழுத்தாளர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு அவர்களுக்கான கருத்தாடல்கள், நம்பிக்கைகள் ஊட்டப்பட்டு வருவதுடன், ஊடகத்தின் மூலமாக சமாதனம், பிரஜைகளின் ஊடகவழிமுறைகள், ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புச் செயன்முறைகள் போன்ற சர்வதேச பட்டறைகள் வழங்கப்பட்டு, சரியான நேரத்தில் சரியான விபரங்களை சரியாக தொகுத்து வழங்குகின்ற ஊடகவியலாளராக அமைகின்றபோது அது தீர்க்கமான சகவாழ்வுக்கு உந்து சக்தியாக அமையும். அவ்வாறான உண்மைகளை எழுதுகின்றபோது சில சில அரசியல்வாதிகள் தங்களை இழிவுபடுத்திவிட்டது என்கிற காரணத்தை மையப்படுத்தி நீதிமன்றம் செல்கின்ற போக்குகளும் காணப்படுகின்றது. விடயத்தைச் சுட்டிக்காட்டுகின்றபோது அதற்குரிய பரிகாரத்தை செய்கின்ற ஒரு நிலை அரசாளும் அரசிடமும், அதிகார வர்க்கத்திடமும் காணப்படுமானால் நீதிகளும், சமசர்மபோக்கும், மக்களுக்காக சேவை செய்கின்ற தார்;ப்பரியமும் உண்மைத்தன்மையான நிருவாகக் கட்டமைப்புக்;களும் மேலோங்கிக் காணப்படும்.

அந்த வகையில் யுனெஸ்கோவின் அண்மைக்கால பிரகடனங்களுள் மிகவும் குறிப்பிடத்தான விடயமாக கருதப்படுகிற ஒருவிடயமாக ஊடகங்களின் பன்மைத் தன்மையும், சுதந்திரமும்(வின்ட் ஹொக், நமீபியா – 1991) சகிப்புத்தன்மை (பரீஸ் - 1995) முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. அதாவது இந்தப்பிரகடனமானது 'ஒருநாட்டில் சிறந்த ஜனநாயகத்தை பராமரிக்கவும், பொருளாதார அபிவிருத்தியின் மேம்பாட்டுக்கு உதவுவனவாகவும், சுதந்திரமானதும், பல்லினத்தன்மைவாய்ந்த பத்திரிகைத்துறையை உருவாக்கவும், அதை படிப்பதற்காக வெளியிடுவதனையும் வலியுறுத்தியே' இவை முன்மொழியப்பட்டுள்ளன. அதனை கட்டிக்காத்து வருடாந்தம் சிறந்த பத்திரிகைகளுக்கு 'புரடைடநசஅழ ஊயழெ' பெயரில் உலக பத்திரிகை சுதந்திரத்திற்கான பரிசுகள் வழங்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பத்திரிகைச் சுதந்திரம் பாதுகாக்கப்படவும். சுதந்திரமான எண்ணக்கருக்களை வெளியிடவும் உரிமையுள்ளது. இதனால் பத்திரிகைகளுக்கும், அதன் செய்தியாளர்களுக்கும் ஏற்படுகின்ற தாக்கங்களை இத்தினத்தில் நினைவுகூறல் அவசியமானது என்பதை யுனெஸ்கோ அமைப்பு சில விடயங்களை முன்னிறுத்தியுள்ளது. அதாவது இன்றைய நாளில் பத்திரிகைச்சுதந்திரத்திரம் பாதுகாக்கப்படும் நோக்கில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை உட்சாகப்படுத்தி, ஆக்கபூர்வமான முறையில் விருத்தி செய்தல், உலக ரீதியாக பத்திரிகை சுதந்திரனது நிலையை மதிப்பிடவும், பத்திரிகை சுதந்திரம் மீதான நடவடிக்கைகளுக்கு மதிப்பளிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தல், பொதுமக்களுக்கு இவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பத்திரிகை மீதான பத்திரிகைசுதந்திரம் பற்றி பத்திரிகையாளர்களிடையே விவாதங்களை மேற்கொள்ளல், பத்திரிகையாளர்கள் தம்முடைய தொழிலின் நிமித்தம் கடமையின் போது காணாமல் போனவர்களினது பெயரில் நினைவுபடுத்துவதும், பத்திரிகை சுதந்திரத்தை ஊக்குவிக்கின்றபோது எற்படுகின்ற பத்திரிகைகளுக்கு எதிராக ஏற்படுகின்ற அடக்குமுறைகளுக்கு எதிராக குரல்கொடுப்பது போன்ற விடயங்களில் முன்னுரிமை வழங்கியே இத்தினம் கொண்டாடப்படுகிறது.

அதேவேளை இலங்கைப் பத்திரிகை புகார்கள் ஆணைக்குழுவினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தொழில் ஒழுக்கக்கோவையில் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் பார்க்கிறபோது ஒவ்வொரு ஊடகவியலாளரும் தொழிலின் கௌரவத்தைப் பேணும் வகையில் நடந்துகொள்வதுடன், நாட்டினதும், பொதுமக்களினதும் நலன்கருதி சனநாயகம் மற்றும் அடிப்படை மனித உரிமைகளைப்பாதுகாத்தல் அத்துடன் குற்றச் செயல், ஊழல், சீர்கெட்ட பரிபாலனம் அல்லது பாரிய தவறொன்றினைக் கண்டு பிடித்தல் அல்லது அம்பலமாக்குதல் விடயங்களில் மிகக் கவனமாக செயற்பட்டு தமது சமூகப் பொறுப்புடன் செயலாற்றுதல் அவசியமாகும் என்பதை வலியுறுத்தியுள்ளன.

இதன்படி பார்க்கின்றபோது இன்று நமது நாட்டுப்பத்திரிகைகளில்கூட நமது நாட்டில் நடைபெறும் அன்றாட அரசியல், பொருளாதார, சமூக, கலாசார, மதவிவகார, சட்டம் போன்ற பல்துறை சார்ந்த விடயங்களை நேரிடையாக எழுதுவற்கு துணிவின்றிக் ஊடகவியலாளர்கள் காணப்படுகின்றனர். மறைமுகமாக வேறுபெயர்களில் எழுதுகின்ற நிலை காணப்படுகிறது. உண்மையான எழுத்துச் சுதந்திரத்தை சரியான முறையில் அமுல்படுத்துவதில் அரசு காட்டும் அக்கரையின்மையே துணிவின்றி காணப்படுவதற்கான காரணமாக அமைந்துள்ளதாக நோக்கப்படுகின்றது. முழுமையாக அரசுக்கு சார்பாக எழுதுகின்ற ஒருநிலைப்பாடு காணப்படுவதன் காரணமாக செய்திகளில் அல்லது அந்தப் பத்திரிகைகளைப் பார்ப்பதற்குக்கூட மக்கள் வெறுப்புற்ற நிலையும் காணப்படுகிறது. இது உண்மையான பத்திரிகை சுதந்திரமாகக் கொள்ள முடியுமா என்ன? மக்களுக்கு ஊடகங்கள் தொடர்பான உரிமைகளும், பொறுப்புக்களும் உள்ளன என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. உண்மையிலேயே ஊடக சுதந்திரம் என்பது பிரஜைகளின் உரிமையேயொழிய ஊடக நிறுவனங்களின் உரிமையல்ல. ஊடகவியலாளர்களும், நிறுவனங்களும் இந்தமக்கள் சார்பாக இவ்வுரிமையை நிறைவேற்றுவதற்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். இதனை தெரிந்து கொள்ள முடியாத நமது மக்களை சில படப்பிடிப்பாளர்கள் அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகளாகி எழுதவும் தெரியாது, ஊடகம் என்றால் என்னவென்றும் புரியாத சிலர் அடையாள அட்டைகளுடன் பத்திரிகைக்காரர்கள் என்று போலித்தனம் செய்து மக்கள் மத்தியில் உலாவருகின்றனர். இவர்கள் உண்மையான ஊடகவியலாளர்கள்தானா? என்பதை சமூகம் இனங்கண்டுகொள்ள வேண்டும்.

உண்மையான சமூக சிந்தனையுள்ள, சமூகத்தின் உண்மைத்தன்மைகளை வெளிக்கொணரவைக்கின்ற ஊடகவியலாளர்கள் இருக்க ஒருசில படங்களை மாத்திரம் பிடித்துக் கொண்டு நாங்களும் ஊடகவியலாளர்கள்தான் என்கிற மமதையில் கிராமப்புறங்களில் சிலர் ஊடறுக்கின்றனர். இவர்களைப் போல அன்று ரிச்சட் டி சொய்சா, ரோகன குமார, ரமேஷ் குமார், பாலநடராஜா, நிமலாராஜன், லசந்த விக்கிரதுங்க, ஆரியரத்ன தொம்பகாவத்தை இன்னும் பல ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டும், படுகொலையும் செய்யப்பட்டனர். இவர்கள் செய்தது சமூகத்தில் காணப்படுகின்ற அக்கிரமங்கள், ஆட்சியதிகாரங்களின் வீரோதத்தன்மைகளை, குழிபறிப்புக்கள் போன்றவைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்ததுதான் இவர்கள் செய்த குற்றங்களாகும். இன்று இதனைத் தவிடுபொடியாக்குகின்ற நிலமையிலிருந்து விடுபட்டு உண்மைத்தன்மையான விடயங்களை வெளிக்கொணர்வதற்கு பத்திரிகையாளன் காரியமாற்ற வேண்டும். இன்று பட்டிதொட்டியெல்லாம் பத்திரிகையாளர் மாநாடுகள் நடாத்தப்படுகின்றன. அந்தளவுக்கு பத்திரிகைகள் சமூகத்தின் காலக்கண்ணாடியாக மாறியுள்ளது. தங்களது கருத்துக்களை வெளியிடுகின்ற சுதந்திரம் ஒருபக்கமிருக்க சிலர் தங்களை அடையாளப்படுத்துவதற்காக பத்திரிகையாளர் மாநாடுகள் என்கிற பேரில் ஒருசில பத்திரிகையாளர்களை அழைத்து நடாத்துவது கேலிக்கூத்துக் ஒப்பான விடயமாகவே பார்க்கப்படுகிறது. இது தவிர்க்கப்பட்டு உண்மையான, சமூகத்திற்கு உதவிடும் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒரு விடயத்திற்கு பத்திரிகைகள் உதவிடுகின்ற அதேவேளை பத்திரிகையாளர்களின் எழுத்துச் சுதந்திரம் பறிக்கப்படாது பாதுகாக்கப்படுகின்ற மேம்பட்ட சமூகத்தைக் கட்டியெழுப்புகின்ற ஊடகமாக தொழிற்படுவதற்கும் இன்றைய நாளை நினைவுகூறல் வேண்டும்.

எனவே, பத்திரிகைகள் உண்மைத்தன்மை, பக்கச்சார்பற்ற தன்மை, சமூகத்திற்கு தீங்குவிளைவிக்காதவாறு செய்திகளை வெளியிடுவதில் மிகவும் அவதானமாக செயற்படுதல் வேண்டும். சமூதாயத்தை தீய வழியில் செல்லுகின்றவாறு செய்திகளை வெளியிட்டு குழப்பங்களுக்கு தூபமிடக்கூடியவாறு பத்திரிகைகள் நடவாது பார்த்துக்கொள்ள வேண்டிய பாரியபொறுப்பும் உண்டு. இந்த நிலைகைள் இருபக்கமும் சாதக பாதக நிலையில் நின்று சிந்திக்;கின்ற நிலை தோற்றம் பெறல்வேண்டும். செய்திகளின் அடிப்படையில் அரசியல் வாதிகளாலும், அவர்களது அடியாட்களாலும் ஏற்படுத்தப்படுகின்றன பத்திரிகைச்சுதந்திர மீறல்கள் ஒழிக்கப்பட்டு சிறந்த தொடர்பூடகத்தன்மை அச்சூடகங்களுக்கு கௌரவத்;தன்மை வழங்கவும் வேண்டியே உலக பத்திரிகை சுதந்தி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னின்று செயற்படுத்த இன்றைய நாளை நினைவுறுவோம்.

எஸ். எல். மன்சூர் (B.Ed)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)