சென்னை,அக்டோபர் 29: பீஹார் தலைநகர் பாட்னாவில் நேற்யை தினம் நடந்த குண்டுவெடிப்புகளில் 6 பேர் கொல்லப்பட்டு, எண்ணற்றோர் படுகாயம் அடைந்துள்ளனர். இது கோழைத்தனமான செயல். வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மதிப்புமிக்க உயிர்களை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் வழங்கியதோடு, இதுகுறித்த முழு விசாரணையை தேசியப் புலனாய்வுக் குழுவிடம் (NIA) ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இக்குண்டுவெடிப்பின் பின்னணி நடுநிலையோடும், மிகுந்த நுட்பத்தோடும் ஆராயப்பட வேண்டும்.
விசாரணைக்கு முன்பே ‘வழக்கம் போல’ பழி சிறுபான்மை சமூகத்தின் மீது போடப்பட்டு, மோடிக்கு அனுதாப அலையை உருவாக்கும் ‘திருப்பணிகள்’ நடக்கிறது. இதுபோன்ற நேரங்களில் வன்முறை சக்திகளிடமிருந்து மக்கள் கவனமாக தள்ளி நிற்க வேண்டும்.
இதில் ‘அபினவ் பாரத்’ போன்ற அமைப்புகளின் பங்கு என்ன என்ற கோணத்தில் யாருமே சிந்திப்பதில்லை.
மோடிக்கும் & நிதிஷ்குமாருக்கும் கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மோதல் நடப்பது அனைவருக்கும் தெரியும். இருவருமே வளர்ச்சியை முன்னிறுத்தி தங்களை பிரதம வேட்பாளராக முன்னிறுத்தும் போக்கு கொண்டவர்கள்.
பாஜகவுக்கும், நிதிஷ்குமாருக்கும் கூட்டணி முறிவு பற்றி ஏற்பட்ட பிறகுதான் பீஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்தது. இக்குண்டு ‘Made in Gujarat’ என ஐக்கிய ஜனதாதளம் கூறிய கருத்து பாஜகவை கோபப்படுத்தியது.
இப்போது ‘சக்தி குறைந்த’ குண்டு வெடித்ததாக வெளியிடப்படும் செய்திகள் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
‘நான் கொல்லப்படலாம்’ என்று ராகுல் காந்தி கூறிய கருத்து தேசமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மோடியின் விளம்பர யுக்திகளை தவிடுபொடியாக்கிய தருணத்தில் இக்குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளதை கவனிக்க வேண்டும்.
‘2014 நாடாளுமன்றத் தேர்தலை நோக்கி...’ காவி பயங்கரவாதிகளால் திட்டமிடப்படும் பல்வேறு சதிகளில் இதுவும் ஒன்றா? என்ற கேள்வியைப் புறக்கணித்துவிட முடியாது.
எது எப்படியாயினும் அப்பாவி மக்களை பயங்கரவாதத்தின் மூலம் அரசியல் ஆதாயங்களுக்காக கொல்வதை, அச்சுறுத்துவதை ஜனநாயக சக்திகள் திரண்டு எழுந்து தடுக்க வேண்டும்.
பயங்கரவாதத்திற்கு சாதி, மதம், மொழி, இனம் இல்லை. ஆனால் இப்போது ‘அரசியல் & அதிகாரம்’ என்ற ஆசை வந்திருப்பது நாட்டுக்கு நல்லதல்ல.
0 comments:
Post a Comment