அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.
ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட், மோடியின் குற்றத்தை நிரூபிக்க முயன்ற ஒரே காரணத்துக்காக, குஜராத் அரசினால் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு, பின்னர் பொய்வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையிலும் வைக்கப்பட்டவர். 2002 இனப்படுகொலையின்போது அவர் அகமதாபாத் நகரின் உளவுத்துறை இணை ஆணையர். குஜராத் இனப்படுகொலை தொடங்கிய நாளான பிப்.27, 2002 அன்று மோடி நடத்திய உயர்மட்ட அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டவர். “”இந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்காதீர்கள்” என்று மோடி அந்தக் கூட்டத்தில் வெளிப்படையாகவே உத்தரவிட்டதை, உச்ச நீதிமன்றம் நியமித்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் பட் சாட்சியமளித்தார். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவும் மோடிக்கு ஆதரவாகச் செயல்படவே, தனது சாட்சியத்தையே உச்ச நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமாக அவர் தாக்கல் செய்தார்.
தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமிகஸ் கியூரேவாக (நீதிமன்றத்தின் நண்பராக) நியமிக்கப்பட்ட ராஜு ராமச்சந்திரன், மோடியைக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை நிராகரித்திருக்கிறார். “”சஞ்சீவ் பட்டின் சாட்சியத்தை நிராகரிக்க முடியாது. அவரையும் பிற மூத்த போலீசு அதிகாரிகளையும் விசாரித்த பிறகுதான் மோடி குற்றவாளியா, இல்லையா என்ற முடிவுக்கு வர முடியும். முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்த நாட்களில், அகமதாபாத் போலீசு கட்டுப்பாட்டு அறையில் இரண்டு அமைச்சர்கள் இருந்திருக்கிறார்கள் என்ற உண்மை சஞ்சீவ் பட்டின் குற்றச்சாட்டுக்கு வலுச் சேர்க்கிறது” என்று தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
“”பிப். 27 கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை” என்பது மோடியின் வாதம். இக்கூட்டத்திற்கான வருகைப்பதிவேடு அல்லது கூட்டக் குறிப்புகளைக் காட்டித் தனது கூற்றை மோடி நிரூபிக்க வேண்டும். ஆனால், அத்தகைய ஆவணங்கள் எதுவும் இல்லை. இனப்படுகொலைக் காலத்தின் பல ஆவணங்களைப் போலவே இவையும் மோடி அரசால் அழிக்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சஞ்சீவ் பட்டின் கார் ஓட்டுனர் பந்த், மேற்சொன்ன கூட்டத்துக்கு சஞ்சீவ் பட்டை அழைத்துச் சென்றதாக ஏற்கெனவே வாக்குமூலம் அளித்திருந்ததால், அந்த ஓட்டுனரின் மீது தனது கவனத்தைத் திருப்பியது மோடி அரசு.
“”சஞ்சீவ் பட் தன்னை மிரட்டி மோடிக்கு எதிராகப் பொய் வாக்குமூலம் வாங்கிவிட்டதாக” அந்த ஓட்டுநரிடம் புகார் எழுதி வாங்கி, அந்தப் புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்தார், மோடி. இப்படியொரு பொய்ப்புகாரைக் கொடுப்பதற்கு அந்த ஓட்டுனரைத் தூண்டியதாக குஜராத் காங்கிரசு தலைவர் அர்ஜுன் மோத்வாடியா, காங்கிரசின் சட்டத்துறைத் துணைத்தலைவர் விஜய் கினாரா ஆகியோர் மீதும் சதிக்குற்றத்தின் கீழ் வழக்கு தொடுத்திருக்கிறார்.
சஞ்சீவ் பட்டின் மாமியார் வீட்டில் மர்மத் திருடர்கள் புகுந்து, பணத்தையோ நகையையோ திருடாமல், ஆவணங்களை மட்டும் அள்ளிச் சென்றிருக்கின்றனர். இதுவரை திருடர்கள் பிடிக்கப்படவில்லை. பட் சிறையில் இருக்கும்போது அவருடைய வீடு சோதனையிடப்பட்டது. அவருடைய லாக்கரை உடைக்கவும் மோடி அரசு முயன்றிருக்கிறது. சஞ்சீவ் பட் பிணையில் வந்த சில நாட்களிலேயே, அவருடைய உறவினர் சிரெனிக்பாய் ஷா என்பவரை மர்ம நபர்கள் கடத்திச் சென்று தாக்கியிருக்கின்றனர். மோடிக்கு எதிரான வாக்குமூலத்தில் கார் ஓட்டுனர் பந்த் கையெழுத்திட்டபோது, உடனிருந்த சாட்சி ஷா என்பது குறிப்பிடத்தக்கது. தனக்கெதிரான சாட்சி குழந்தையானாலும், நாய்க்குட்டியானாலும் அனைத்தையும் கொன்றொழிக்கும் வக்கிரத்தில், தெலுங்கு சினிமா வில்லன்களையும் விஞ்சிவிட்டார் நரேந்திர மோடி.
“”சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டிருப்பது, 2002 முஸ்லிம் இனப்படுகொலை நடவடிக்கையின் கொள்கை ரீதியான தொடர்ச்சி. 2002 இனப்படுகொலை குறித்த திரைமறைவு உண்மைகளை வெளியிட்ட முதல் நேரடி சாட்சி ஹரேன் பாண்டியா. மோடியின் அன்றைய வருவாய்த்துறை இணை அமைச்சரான இவர், 2003இல் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்போது மோடிக்கு எதிரான இரண்டாவது நேரடி சாட்சி சஞ்சீவ் பட்” என்று கூறியிருக்கிறார் ஓய்வு பெற்ற குஜராத் டி.ஜி.பி. சிறீகுமார்.
2002 இனப்படுகொலையின்போது குஜராத்தில் அமைச்சராக இருந்த ஹரேன் பாண்டியாவுக்கு மோடியுடன் முரண்பாடு ஏற்பட்டதன் காரணமாக, குஜராத் படுகொலை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி சாவந்த் தலைமையிலான சிட்டிசன்ஸ் டிரிபியூனலின் முன் சாட்சியமளித்தார். பிப். 27 உயர் அதிகாரிகள் கூட்டத்தில் மோடி பேசியது என்ன என்பதை வாக்குமூலமாக தெரிவித்தார். இந்த தகவல் மோடிக்கும் கசிந்து விட்டது. இதனைத் தொடர்ந்து மார்ச் 23, 2003 அன்று பாண்டியா படுகொலை செய்யப்பட்டார். பழி முஸ்லீம் தீவிரவாதிகள் மீது போடப்பட்டது. அந்தக்கொலை வழக்கில் அன்று மோடி அரசால் கைது செய்யப்பட்ட அஸ்கார் அலி உள்ளிட்ட 11 பேரும் இப்போது விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.
2004இல் சபர்மதி மத்திய சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சஞ்சீவ் பட்டிடம் அதே சிறையில் வைக்கப்பட்டிருந்த அஸ்கர் அலியும் மற்ற கைதிகளும் பேசியிருக்கின்றனர். பாண்டியாவைத் தாங்கள் கொல்லவில்லை என்றும் சோரபுதீன் கும்பலைச் சேர்ந்த துளசிராம் பிரஜாபதி என்பவன்தான் சுட்டுக் கொன்றதாகவும் கூறியிக்கின்றனர். உடனே இந்தத் தகவலை அன்றைய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் தெரிவித்திருக்கிறார் சஞ்சீவ் பட். பதற்றமடைந்த ஷா இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் என்று பட்டிடம் எச்சரித்திருக்கிறார். பாண்டியா கொலையில் சோரபுதீன் கும்பல் மட்டுமின்றி உயர் போலீசு அதிகாரிகளுக்கும் அரசுத் தலைமையில் உள்ள சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவரவே, அவற்றை அதிகாரபூர்வமான கடிதமாக எழுதி உள்துறை அமைச்சருக்கே அனுப்பியிருக்கிறார் பட். உடனே அங்கிருந்து அவர் தூக்கியடிக்கப்பட்டார்.
பின்னர் 2005இல் சோரபுதீன் ஷேக்கும் அவர் மனைவி கவுசர் பீவியும் போலி மோதலில் குஜராத் போலீசின் பயங்கரவாத எதிர்ப்புப் படையினரால் கொலை செய்யப்பட்டனர். “”இந்தப் போலி மோதல் கொலையை” கண்ணால் கண்ட ஒரே சாட்சியான துளசிராம் பிரஜாபதியும் 2006இல் இன்னொரு போலி மோதலில் கொல்லப்பட்டான்.
பிரஜாபதியைக் கொல்வதற்காகவே, டி.ஐ.ஜி. வன்சாராவை அகமதாபாத்திலிருந்து எல்லைப்புற மாவட்டத்துக்கு மாற்றியிருக்கிறார் மோடி. “”தன்னை குஜராத் போலீசு போலி மோதலில் கொன்றுவிடும் என்று அஞ்சுவதாக” கொல்லப்படுவதற்கு 14 நாட்கள் முன்னதாக உதய்பூர் மாவட்ட நீதிபதிக்கும், தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் பிரஜாபதியே கடிதம் எழுதியிருக்கிறான்.
தற்போது சோரபுதீன் கொலை வழக்கில் குஜராத் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சோரபுதீன் கொலைக்கும் அமைச்சர் பாண்டியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாக சோரபுதீனின் கும்பலைச் சேர்ந்த ஆசம்கான், சென்ற ஆண்டு சி.பி.ஐ. இடம் வாக்குமூலம் தந்திருக்கிறான். இந்தக் கொலைகளின் பின்னணி குறித்த ஆதாரபூர்வமான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக சஞ்சீவ் பட் குஜராத் உயர் நீதிமன்றத்தில் சென்ற மாதம் மனு தாக்கல் செய்தார். அடுத்த மூன்றே நாட்களில் சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டார்.
2002 இனப்படுகொலையின் போது கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட காங்கிரசு கட்சியின் முன்னாள் எம்.பி. இஷான் ஜாப்ரி கொலையிலும் மோடிக்குத் தொடர்பிருப்பதாக பட் குற்றம் சாட்டியிருக்கிறார். ஜாப்ரியின் குடியிருப்புப் பகுதியான குல்பர்க் சொசைட்டி, கொலைக் கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டபோது, அது பற்றி நேரடியாக மோடிக்குத் தகவல் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் சஞ்சீவ் பட் கூறியிருக்கிறார்.
மோடியின் கிரிமினல் குற்றங்களை மட்டுமின்றி, அரசு எந்திரத்தில் ஊடுருவியிருக்கும் பார்ப்பன பாசிஸ்டுகள் இனப்படுகொலைக் குற்றவாளிகளைத் தப்பவைப்பதற்குச் செய்யும் சதிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறார், சஞ்சீவ் பட்.
குஜராத் போலீசின் விசாரணை மாபெரும் பித்தலாட்டம் என்று அம்பலமானதைத் தொடர்ந்து, முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் ராகவன் தலைமையில் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து மிக முக்கியமான குஜராத் வழக்குகளை விசாரிக்கக் கூறியது, உச்ச நீதிமன்றம். அந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை கொலைக் குற்றவாளிகளிடம் கள்ளத்தனமாக தரப்பட்டு விட்டது என்று சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியபோது, ராகவன் அதை மறுத்தார். ஆனால், குஜராத் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தாவின் மின்அஞ்சல் முகவரியிலிருந்து சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வழக்கு விசாரணை குறித்த விவரங்கள் குல்பர்க் சொசைட்டி வழக்கின் கொலையாளிகளுக்கும், சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் எஸ்.குருமூர்த்திக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன. 17.10.2010 தேதியிட்டு இந்து என்.ராமுக்கு குருமூர்த்தி அனுப்பியுள்ள மின் அஞ்சலின்படி, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் உச்ச நீதிமன்றத்திற்குக் கொடுத்திருக்கும் “இரகசிய அறிக்கை’யின் நகலை குருமூர்த்திக்கும் அனுப்பி வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. மோடியைக் குற்றமற்றவர் என்று கூறும் ராகவனின் அறிக்கை குறித்த தனது பாராட்டையும் மேற்கூறிய மின் அஞ்சலில் ராமுக்கு தெரிவித்திருக்கிறார், குருமூர்த்தி. குஜராத் வழக்குகள் தொடர்பாக துக்ளக் சோ, இந்து ராம், குருமூர்த்தி ஆகியோரிடையே ஆலோசனை நடந்துள்ளதாகவும் அந்த மின் அஞ்சலில் குருமூர்த்தி கூறுகிறார். உச்ச நீதிமன்றத்தில் இந்த மின் அஞ்சல்களின் பிரதிகளை ஆவணங்களாக முன்வைத்திருக்கிறார், சஞ்சீவ் பட். (இந்துஸ்தான் டைம்ஸ், 23.10.2011)
கூடுதல் அட்வகேட் ஜெனரலாக இருந்து கொண்டு, குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்கு கிரிமினல் வேலை செய்திருக்கும் யோக்கிய சிகாமணியான துஷார் மேத்தா, தன்னுடைய மின் அஞ்சல்களைச் சட்டவிரோதமான முறையில் திருடிவிட்டதாக சஞ்சீவ் பட்டின் மீது அகமதாபாத் சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் (தி இந்து, 24.10.2011). மின் அஞ்சல் குறித்து கேள்வி எழுப்பிய இந்துஸ்தான் டைம்ஸ் நிருபரிடம் “நினைவில்லை’ என்று பதிலளித்திருக்கிறார், என்.ராம். “”உனக்குப் பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை” என்று பதிலளித்திருக்கிறார், குருமூர்த்தி.
சஞ்சீவ் பட்டைத் தொடர்ந்து மோடி அரசால் பழிவாங்கப்பட்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ். அதிகாரி ராகுல் சர்மா. 2002 இனப்படுகொலைக்குப் பின்னர் அகமதாபாத் நகரின் கட்டுப்பாட்டு அறையின் இணை ஆணையராக நியமிக்கப்பட்டவர் ராகுல் சர்மா. தனக்கு ஒதுக்கப்பட்ட புலனாய்வுப் பணியின் அங்கமாகப் படுகொலை உச்சத்தில் இருந்த பிப்ரவரி 29 முதல் மார்ச் 3ஆம் தேதி வரையிலான நாட்களில் அகமதாபாத் நகரின் கைபேசி உரையாடல் விவரங்கள் அனைத்தையும் தனியார் செல்பேசி நிறுவனங்களிடமிருந்து திரட்டி, கமிசனர் பி.சி.பாண்டேயிடம் அந்தக் குறுந்தகடை அவர் ஒப்படைத்திருந்தார். அந்தக் குறுந்தகட்டின் நகல்களை நானாவதி கமிசன், பானர்ஜி கமிசன், சிறப்புப் புலனாய்வுக் குழு ஆகிய அனைவருக்கும் ராகுல் சர்மா கொடுத்து விட்டார். இதன் விளைவாக, அமைச்சர் மாயா கோத்னானி, விசுவ இந்து பரிசத் செயலர் ஜெய்தீப் படேல் ஆகியோர் கொலை வழக்கில் சிக்க நேர்ந்தது.
இனப்படுகொலை நடந்த பிப். 28ஆம் தேதியன்று மோடி, ஜெய்தீப் படேலுடன் 5 முறையும், போலீசு கமிசனர் பாண்டேயுடன் 15 முறையும் பேசியிருக்கிறார். காலை 11 மணி முதல் நகரம் எரியத் தொடங்கிவிட்ட போதிலும், கமிசனர் மாலை 7 மணி வரை அலுவலகத்தை விட்டு வெளியே இறங்கவில்லை” என்று தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறார் கொலை செய்யப்பட்ட அமைச்சர் பாண்டியா. இந்தத் தொலைபேசி விவரங்களை விசாரணைக் கமிசன்களுக்குக் கொடுத்த ராகுல் சர்மாவின் மீது “அரசாங்க இரகசியத்தை’ அம்பலமாக்கியதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது , மோடி அரசு.
இனப்படுகொலையின் மையமாக இருந்த அகமதாபாத் நகரின் அன்றைய கமிசனர் பி.சி.பாண்டே, பின்னர் குஜராத்தின் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். மோடியின் கையாளான பாண்டே, சோரபுதீன் போலி மோதல் கொலை வழக்கின் விசாரணையில் தலையிட்டது மட்டுமின்றி, துளசிராம் பிரஜாபதியைக் கொல்வதற்கும் சதித்திட்டம் தீட்டிக் கொடுத்தார் என்று எழுத்துபூர்வமாகவே குற்றம் சாட்டியிருக்கிறார் டி.ஐ.ஜி. ரஜனீஷ் ராய். சோரபுதீன் கொலை வழக்கை விசாரித்து, வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன் ஆகிய ஐ.பி.எஸ். அதிகாரிகளையே கொலை வழக்கில் கைது செய்தவரான ரஜனீஷ் ராயை, பதவி இறக்கம் செய்ய முனைந்திருக்கிறது, மோடி அரசு.
சட்டப்படியும் மனச்சான்றின்படியும் நடக்க முயன்ற எந்தவொரு அதிகாரியையும் மோடி விட்டுவைக்கவில்லை. 2002 இனப்படுகொலையின் போது இந்து மதவெறிக் காலிகளைக் கைது செய்து இனப்படுகொலை நடக்காமல் தடுத்த விவேக் ஸ்ரீவத்ஸவா, ஹிமான்ஷு பட், எம்.டி. ஆன்டனி, பி.சி.தாகூர், குல்தீர் சர்மா போன்ற பல ஐ.பி.எஸ். அதிகாரிகள் வேட்டையாடப்பட்டிருக்கின்றனர். மோடியையும் தொகாடியாவையும் கொலை செய்ய முயன்ற பயங்கரவாதி என்று முத்திரை குத்தி போலீசால் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹான் என்ற பெண்ணின் போலி மோதல் கொலை வழக்கை விசாரித்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரி சதீஷ் சந்திர வர்மா, “”கொலை செய்யப்பட்ட அந்த அப்பாவிப் பெண்ணைப் பயங்கரவாதி என்று சித்தரித்து வழக்கை மூடுவதற்குத் தனது உயரதிகாரிகள் முயற்சிப்பதாக” குஜராத் உயர் நீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலமே தாக்கல் செய்திருக்கிறார்.
மேற்கூறிய விவரங்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவை. இதில் பட்டியலிடப்படாத இன்னும் பல அதிகாரிகள் மோடி அரசால் வேட்டையாடப் பட்டிருக்கின்றனர். மோடி ஒரு இனப்படுகொலைக் குற்றவாளி என்பதைப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன விவரங்கள் நமக்குத் தேவையில்லை. அந்தக் குற்றவாளியை சட்டப்படி தண்டிக்க முயலும் நேர்மையான அதிகாரிகளுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதற்கு நமக்கு இந்த விவரங்கள் தேவை.
ஜெயலலிதாவிடம் எம்.எல்.ஏ. நாற்காலிகளை இரந்து பெற்று, வெட்கமே இல்லாமல் மோடியின் பக்கத்து நாற்காலியில் இளித்துக் கொண்டு அமரும் வலது, இடது போலி கம்யூனிஸ்டுகளைப் போன்ற பதர்களுக்கு மத்தியில், தனது உயிரையும் பணயம் வைத்து நீதிக்காகப் போராடும் சில போலீசு அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்ற உண்மையைத் தெரிந்து கொள்ள இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
சட்டத்தின் ஆட்சி, நேர்மை, நடுநிலை என்று ஊர்நாயம் பேசும் சோ, குருமூர்த்தி போன்ற பார்ப்பன பாசிஸ்டுகள், எல்லா விதமான கிரிமினல் வேலைகளிலும் ஈடுபடத் தயங்காதவர்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் இவ்விவரங்கள் தேவை. அரசு அதிகாரத்தை பார்ப்பன பாசிஸ்டுகள் கைப்பற்றினால், மேலிருந்து கீழ் வரை அதனை எப்படி கிரிமினல் மயமாக்குவார்கள் என்பதை விளங்கிக் கொள்வதற்கும் இவ்விவரங்கள் நமக்குத் தேவை.
இவ்வளவு நயவஞ்சகனான மோடி என்ற கொலைகாரனை அன்புச் சகோதரராகப் போற்றும் ஜெயலலிதாவும், இந்த மோசடிப் பேர்வழியின் நிர்வாகத் திறமையைக் கொண்டாடும் ஊடகங்களும், பிரதமராக்க விரும்பும் ஆளும் வர்க்கமும் எப்பேர்ப்பட்ட கிரிமினல்கள் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் கூட இந்த விவரங்களெல்லாம் நமக்குத் தேவைதானே!
0 comments:
Post a Comment