நாகப்பட்டினம்,நவம்பர் 18: தஞ்சை மாவட்டம் கும்ப கோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன்அன்சாரி (வயது 47). இவருடைய மனைவி பாத்திமா (40).
இவர்கள் தங்க நகைகளை கொடுத்தால் மாதந்தோறும் பணம் தருவதாகவும், ஒரு பவுனுக்கு ரூ.ஆயிரம் தருவதாகவும், கேட்கும் நேரத்தில் தங்க நகைகளை பணத்துடன் திருப்பி தந்துவிடுவதாகவும் கூறி தொழில் நடத்தி வந்தனர். இவர்கள் கூறியதை உண்மை என நம்பிய மயிலாடுதுறை கிளியனூர், வடகரை, சிதம்பரம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், தங்களுடைய தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தனர்.
முதலில் பெண்களிடம் தங்க நகைகளை வாங்கி அதை தனியார் வங்கிகள், பெரிய நிதி நிறுவனங்களில் அடகு வைத்து மாதந்தோறும் பணமாக கொடுக்கப்பட்டது. இதை நம்பி மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த மேலும் பல பெண்கள் தமிமுன்அன்சாரி மற்றும் பாத்திமாவிடம் தங்க நகைகளை கொடுத்தனர்.
பின்னர் இருவரும் மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் முகவர்களை நியமித்து தொழில் நடத்தினர். இதில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் 10 ஆயிரம் பவுன் மதிப்புள்ள தங்க நகைகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தங்க நகைகளை கொடுத்த பெண்களுக்கு பணம் கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இது குறித்து தமிமுன்அன்சாரி மற்றும் அவரது மனைவி பாத்திமாவிடம் கேட்டனர். அப்போது கணவன்–மனைவி இருவரும் தங்க நகைகளை பெற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மயிலாடுதுறை பகுதிகளை சேர்ந்த பெண்கள் நாகை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில் பாத்திமா தமிமுன்அன்சாரி ஆகியோர் தங்க நகைகளை பெற்றுக்கொண்டு பணம் கொடுத்தது பற்றியும், பின்னர் நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியது பற்றியும் கூறி இருந்தனர். பின்னர் இதுதொடர்பாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்கரவர்த்தியிடம் புகார் அளிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று நகை மோசடி குறித்து புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து 10 ஆயிரம் பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக புகார் கூறப்பட்ட பாத்திமா சென்னை டி.ஜி.பி. அலுவலகத்துக்கு சென்று புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தனது கணவர் தமிமுன்அன்சாரி கடத்தப்பட்டு விட்டதாக கூறி இருந்தார். இந்த புகார் மனு கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் மோசடி புகார் தொடர்பாக நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று முன்தினம் இரவு கும்பகோணத்தில் இருந்த பாத்திமா, அவருடைய கணவர் தமிமுன்அன்சாரி ஆகியோரை நாகை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நாகைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருவரிடமும் விசாரணை நடந்தது. விசாரணையில் தமிமுன் அன்சாரியும், பாத்திமாவும் சேர்ந்து மயிலாடுதுறை பகுதி பெண்களிடம் இருந்து 6 ஆயிரத்து 184 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 2 பேரையும் நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
0 comments:
Post a Comment