முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

டிசம்பர் 6, 1992: பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட தருணங்களில்... என் அனுபங்கள்! மனம் திறக்கிறார் மமக பொதுசெயலாளர் அன்சாரி !!!

டிசம்பர் 6 வருகிறது! 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அந்தக் கோரச் சம்பவங்கள் நினைவுகளை கண்ணீரோடு மீட்டுகின்றன.


நான் 1992ல் 12ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் அயோத்தி விவகாரம் பரபரப்பான நிகழ்வாக இருந்தது.

பாபரி மஸ்ஜிதை உடைக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு சமுதாய மக்களிடம் இருந்தது.

டிசம்பர் 6 நெருங்க நெருங்க மதக்கலவர அபாயங்கள் அனைவரையும் அச்சமூட்டிக் கொண்டிருந்தது. 

செய்தித் தாள்களும், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனும், வானொலியும்தான் அப்போது தகவல் தொடர்பு சாதனங்கள்.அனைவரின் கவனமும் வானொலி செய்திகளை கவனித்தபடியே இருந்தன எனலாம்.

அன்று 1992 டிசம்பர் 6! ஞாயிற்றுக்கிழமை. எனது வீட்டில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்க்கிறேன். இந்திப்படம் ஒன்று காலையில் ஓடிக்கொண்டிருந்தது.தொலைகட்சியில் அப்போது நகரும் எழுத்துக்கள் (Flashnews) வழியாக அவசர செய்திகளைத் தெரிவிக்கும் வசதிகள் எல்லாம் இல்லை.

நான் எங்கள் ஊரில் (தோப்புத்துறை) உள்ள பெரிய பள்ளிவாசலுக்கு லுஹர் தொழுக சென்றேன். அப்போது தப்லீக் ஜமாஅத்தினர் அங்கே தொழுகைக்குப் பிறகு ‘பயான்’ செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் எந்த பரபரப்பும் இல்லை.

மதியத்திற்குப் பிறகு வானொலி செய்தியைக் கேட்டேன்.அப்போது “தாவாவுக்கு உட்பட்ட இடத்தில் இருந்த மசூதிக்கு சிறிய அளவில் கரசேவகர்கள் சேதத்தை ஏற்படுத்தினார்கள்” என்ற அளவில் மட்டுமே செய்தி ஒலிபரப்பப்பட்டது.

எனக்குப் பொறி தட்டியது.ஏதோ ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டுவிட்டது என்பதையும், அதை அரசு ஊடகங்கள் மறைக்கின்றன என்பதையும் புரிந்துகொண்டேன்.

உடனே இரவு 7.15 மணிக்கு என்னிடமிருந்த கையடக்க வானொலி மூலம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிலிருந்து ஒளிபரப்பாகும் ‘வெரிடாஸ்’ தமிழ் செய்தியைக் கேட்டேன். அங்குதான் ரபிபெர்னாட், ஜெகத்கஸ்பர் போன்றோர் முன்பு பணியாற்றினர்.

அதில் பாபரி மஸ்ஜித் உடைக்கப்பட்ட செய்தியைக் கூறினார்கள் நாங்கள் பதட்டம்அடைந்தோம். அடுத்து இரவு 9.15க்கு லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் பி.பி.சி. தமிழ் செய்தியிலும் அதை உறுதிப்படுத்தினார்கள்.

எனக்கு கண்கள் கலங்கியது.ஏதாவது ஒருவகையில் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமே என மனம் துடித்தது. உடனடியாக நண்பர்கள் சிலரை வரவழைத்து எங்கள் ஊர் பஜார் பகுதியில் (ஆறுமுகச்சந்தி) கூடுகிறோம். 

அப்போது பாபாவின் தலைமையில் ஜிஹாத் கமிட்டி எழுச்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்த நேரம்.நாங்கள் கூடுகிறோம் என தெரிந்ததும் சில நிமிடங்களில் காவல்துறையினர் வந்திறங்கி, அனைவரையும் கலைந்துபோக அறிவுறுத்தினர்.

நாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமே எனக் கருதி, அருகில் உள்ள படேசாஹிப் தர்ஹாவுக்கு போனோம். அங்கு ஜமாஅத்தினர் ‘கேட்டை’ பூட்டி, பிரச்சனைகளை செய்யாதீர்கள் என அறிவுறுத்தி அனுப்பினர். அவ்வளவு பயம்!

எங்கும் பதட்டம் பரவியதால், அடுத்த நாள் கூடி ஆலோசிப்போம் என முடிவு செய்தோம். எல்லோரும் போன பிறகும், நாங்கள் 10, 15 பேர் வீட்டிற்குச் செல்லவில்லை. அப்போதெல்லாம் இரவு 10 மணி என்பதெல்லாம் ஊரடங்கும் நேரம்!

நாங்கள் கிணற்றடி அருகே உள்ள மரக்கடையில் இருக்கும் பெரும் பெரும் உருட்டுக் கட்டைகளை நகர்த்தி சாலைகளில் தடுப்பை ஏற்படுத்திவிட்டு கலைந்தோம்.

அடுத்த நாள், பேருந்து ஒன்றை உடைக்க வேண்டும் என கோபமான முடிவு எடுக்கப்பட்டது.இதற்கு ஆலோசனைப் பெறுவதற்காக, பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகராக இருந்த மாவன்னா மாரிமுத்து கவுண்டரைச் சென்று சந்தித்தோம்.

மழை தூறிக் கொண்டிருந்த பகல் பொழுதில், அவரது குரவப்புலம் வீட்டில் சந்தித்து பேசினோம்.பழனிபாபா அவர் வீட்டில் தங்கியிருக்கிறார். பாபாவின் மீது அவருக்குப் பிரியம் அதிகம்.

சரி, செய்யுங்கள். நானும் பாமகவினரை துணைக்கு அனுப்புகிறேன். ஆனால், வழக்குகளை எல்லாம் சந்திக்க வேண்டிவரும் என்று சொல்லி அனுப்பினார்! ஒருகட்டத்தில் பேருந்தை கொளுத்துவது என்றும் முடிவானது. 

அதற்குள் நாடெங்கிலும் கலவரச் செய்திகளும், முஸ்லிம்கள் மீது துப்பாக்கிச் சூடு நடைபெறுவதையும் அறிந்து, கலங்கினோம்.ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற இயக்கங்கள் தடை செய்யப்படுவதாகவும், அதற்கு சமன் செய்யும் வகையில் ஜமாஅத்தே இஸ்லாமியும், கேரளாவில் மதானியின் தலைமையில் செயல்பட்ட ஐ.எஸ்.எஸ்.சும் தடை என மத்திய அரசு அறிவித்தது.

பத்திரிக்கைகள் தங்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும் வகையில் கறுப்பு எழுத்துக்களில் செய்தியை வெளியிட்டன. தலைவர்கள் எல்லாம் கடும் கண்டனங்களை வெளியிட்டிருந்தார்கள்.

பதட்டத்தைத் தணிக்கும் வகையில் மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத்துறை செயல்பட்டது. வானொலியில் கமல்ஹாசன் பேசினார். “நான் இந்து என்பதற்காக முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” என பேசினார்.

எங்களுக்கு மனம் ஆறவில்லை. அப்போது முஸ்லிம் லீக், ஜிஹாத் கமிட்டி ஆகிய இரண்டும் தான் பெரிய அமைப்புகள். ஆனால், தெளிவான வழிகாட்டல்கள் இல்லாததால் மக்களின் எதிர்ப்பை முறைப்படுத்த இயலவில்லை.

பேருந்தை உடைப்பது ஒன்றுதான் எதிர்ப்பை தெரிவிப்பதற்கான வழி என அனைவரின் மனமும் சொல்லியது. அன்று இரவு 12 மணி வரை ‘வாட்டர் டேங்க்’ பகுதியில் இருளில் 30க்கும் மேற்பட்டோர், இரவுப் பேருந்துகளை எதிர்பார்த்து பதுங்கியிருந்தோம்.ஆனால், பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது எங்களுக்கு தெரியாமலேயே போனது.

என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகில் நாகூரும், முத்துப்பேட்டையும் தான் பெரிய மஹல்லாக்கள்.கட்டிமேடு, துளசியாபட்டினம், திருப்பூண்டி, நாச்சிக்குளம் போன்றவை சிறிய மஹல்லாக்கள்.

முத்துப்பேட்டையில் ஷேக்காதி என்பவர் தலைமையில் ஜிஹாத் கமிட்டி வலுவாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களிடம் ஆலோசனைக் கேட்க முத்துப்பேட்டைக்கு விரைந்தேன். அவர்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.

பிறகு நாச்சிக்குளத்திற்குச் சென்று அங்குள்ள நண்பர்களுடன் ஆலோசனை நடந்தது. அங்கும் பேருந்தை உடைக்க வேண்டும் என்ற மனநிலைதான் எதிரொலித்தது!அங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தொடர்ந்து ஒருமாதம் பதற்றம் நீடித்தது.துக்ளக், ஜுனியர் விகடன், ஜுனியர் போஸ்ட், நக்கீரன், தராசு, இந்தியா டுடே போன்ற வார இதழ்கள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.

நமக்கொரு வழிகாட்டல் இல்லையே... களத்தில் போராட இயக்கங்கள் இல்லையே... என கவலைகள் எழுந்தன. உருப்படியாகப் போராடவும், உணர்வுகளை வெளிப்படுத்தவும் வழியில்லையே என்ற விரக்தியும் மேலோங்கியது.

இன்று அதை நினைத்துப் பார்ப்பதற்குக் காரணம், இன்று இந்தியாவுக்கே முன்மாதிரி இயக்கமாக செயல்படும் தமுமுக அன்று இருந்திருந்தால், வன்முறை இல்லாமல் எதிர்ப்புகள் ஜனநாயக வழியில் எப்படியெல்லாம் வழிகாட்டப்பட்டிருக்கும் என்பதற்காகத்தான்!இன்று பாபரி மஸ்ஜித் இருந்த உ.பி.யில் டிசம்பர் 6ல் போராட்டங்கள் இல்லை!

ஆம், ஜனநாயக இயக்கங்கள் வலுப்பெற்றால் தான் அரசியல் - சமூகப் பிரச்சனைகளுக்கு மக்களைத் திரட்டி தீர்வுகாண முடியும்! தமுமுக போன்ற இயக்கங்கள் இல்லாததால், முஸ்லிம்கள் 20-25 சதவீதத்திற்கு மேல் வாழும் உ.பி., பீஹார், மேற்கு வங்கம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களின் வாழ்வியலும், உரிமைப் போராட்டங்களும் வீழ்ச்சியடைந்து கிடப்பதை அறியும் போது மனம் உடைந்து போகிறது!

(நினைவுகள் சுழலும்...)

(காத்திருங்கள்... விரைவில் 1996 முதல் 1998 வரை நடைபெற்ற தடையை மீறிய டிசம்பர் 6 போர்க்கள அனுபவங்கள் பகிரப்படும்)

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)