தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மழை பெய்ய வில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது.
இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமானதால் பொது மக்கள் மழை பெய்யாதா என ஏங்கி கொண்டு இருந்தனர். விவசாயிகளும் மழை பெய்தால் பயிர்கள் புத்துயிர் பெறும் என்று மழையை எதிர்பார்த்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை மேகம் கூடி விட்டு மழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது. ஆனால் இன்று காலை யாரும் எதிர்பார்க்காத நிலையில் சீர்காழி, தென்பாதி, சட்ட நாதபுரம் ஆகிய இடங்களில் காலை 4 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு ஆகிய இடங்களில் தூரல் மழை பெய்தது.
திருவாரூர் மற்றும் சுற்றி உள்ள கிராமங்களிலும் இன்று காலை மிதமான மழை பெய்தது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
வேதாரண்யம் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. காலை வரை மழை நீடித்தது. இதனால் மானவாரி நிலங்களில் சாகுபடி செய்து உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. வேதாரண்யத்தில் 17.7 மி. மீட்டர் மழையும், தலை ஞாயிறில் 4.6 மி. மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
வேதாரண்யம் கடியபட்டினம் ரோட்டில் உள்ள மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளில் மின் சாதன பொருட்கள் கருகி சேதமானது.
தஞ்சையில் இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை லேசான தூறல் மழை பெய்தது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று காலை தூறல் மழை பெய்தது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.
0 comments:
Post a Comment