முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

மனிதவெடிகுண்டால் பலியான ராஜீவ் காந்தி -ஓர் சிறப்பு பார்வை !!

கடந்த 20-ம் நூற்றாண்டில் உலக நாடுகளில் எத்தனையோ அரசியல் படுகொலைகள் நடந்துள்ளன. இந்தியாவில் தேசத்தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய மெய்க்காவலர்களே சுட்டுக்கொன்றனர்.
ஆயினும் 47 வயதே நிறைந்தவரும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவருமான ராஜீவ் காந்தி தமிழ் மண்ணில் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடி குண்டாகவந்த ஒரு பெண்ணால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் ரத்தத்தை உறையச் செய்வதாக இருந்தது.
பிரதமர் பதவியை 7-3-1991-ல் சந்திரசேகர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஜுன் மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெறுவதாக இருந்தது. மே 21-ந்தேதி தமிழ்நாட்டில் தேர்தல் பிரசாரம் செய்ய ராஜீவ் திட்டமிட்டார்.





ragiv gandhi2




21-ந்தேதி பகலில் அவர் ஆந்திராவில் பல தேர்தல் கூட்டங்களில் பேசிவிட்டு மாலை 6.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னைக்குப் புறப்படுவதாக இருந்தார். ஆனால் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மறுநாள் காலை சென்னை போகலாம் என்று எண்ணினார். விருந்தினர் மாளிகைக்கு சென்று கொண்டிருந்தபோது “விமானம் சரியாகி விட்டது சென்னைக்குப் புறப்படலாம்” என்று தகவல் வந்தது. எனவே காரை விமான நிலையத்துக்குத் திருப்பச் சொன்னார்.
விமானம் 7 மணிக்குப் புறப்பட்டது. அதில் இரவு 8.26 மணிக்கு ராஜீவ் காந்தி சென்னை வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தேர்தல் பற்றி கேட்டதற்கு “மத்தியில் முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்” என்று பதிலளித்தார். பிறகு சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்குக் காரில் சென்றார். அங்கு இ.காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 10.10 மணிக்கு அவர் ஸ்ரீபெரும்புதூர் போய்ச்சேர்ந்தார்.
பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகே இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்தார். பிறகு மேடையை நோக்கிச் செல்லும்போது வழியில் கூடியிருந்தவர்கள் அளித்த வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்க நின்று கொண்டிருந்தவர்களில் அரக்கோணத்தை சேர்ந்த லதா கண்ணன் (வயது 35) என்ற காங்கிரஸ் ஊழியரும் ஒருவர். அவருடன் அவர் வளர்ப்பு மகளான கோகிலா என்ற 15 வயதுச்சிறுமியும் வந்திருந்தாள். அவள் ராஜீவ் காந்தியைப் புகழ்ந்து இந்தியில் எழுதி வைத்திருந்த கவிதையைப் படித்தாள்.
அதை ராஜீவ் ரசித்துக் கேட்டார். இவர்களுடன் சுமார் 20 வயது மதிக்கத்தக்க ஒரு மர்மப்பெண் நின்று கொண்டிருந்தாள். சுடிதார் உடையில் இருந்த அவள் மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தாள். கையில் ஒரு சந்தன மாலை இருந்தது. கோகிலா கவிதை பாடி முடித்ததும் ராஜீவ் காந்தி அவள் முதுகில் அன்புடன் தட்டிக்கொடுத்தார். அவர் அங்கிருந்து நகரத் தொடங்கும்போது கையில் சந்தன மாலை வைத்திருந்த பெண் அவர் அருகே சென்றாள். மாலையை அவர் கழுத்தில் அணிவித்தாள்.
கண்மூடி திறப்பதற்குள் அவள் கை இடுப்பில் மறைவாக கட்டியிருந்த பெல்ட்டைத் தொட்டது. அவ்வளவுதான். பெல்ட்டுடன் கட்டியிருந்த குண்டுகள் வெடித்தன. ராஜீவ் காந்தியும், அவரைச் சூழ்ந்து நின்று கொண்டிருந்தவர்களும் உடல் சின்னாபின்னமாகச் சிதறி தரையில் வீழ்ந்தார்கள். குண்டு மிக சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் சத்தம் அதிகம் கேட்கவில்லை.
தவிரவும் மேடை அருகே காங்கிரசார் பட்டாசுகளைக் கொளுத்திக்கொண்டு இருந்தனர். எனவே அருகே இருந்தவர்கள் கூட குண்டு வெடித்ததை உடனடியாக உணர முடியவில்லை. புகை மண்டலமாக இருக்கிறதே என்று ஓடிச்சென்று பார்த்தபோது பலர் உடல் சிதைந்து பிணமாகக் கிடந்த பயங்கரக்காட்சியைக் கண்டு அலறினார்கள்.
ragiv gandhi3
இந்தக் கூட்டத்துக்காக வந்திருந்த காங்கிரஸ் தலைவர்கள் கருப்பையா மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் ஏதோ விபரீதம் நடந்து விட்டதை அறிந்து ஓடோடி வந்தனர். “ராஜீவ் எங்கே? ராஜீவ் எங்கே?” என்று கதறினார் மூப்பனார். ராஜீவ் காந்தி தலைகுப்புற கிடந்தார். அவர் தலையின் பின்புறம், காலில் அணிந்திருந்த பூட்ஸ் ஆகியவற்றைக் கொண்டு, அவர் ராஜீவ் காந்தி என்று அடையாளம் கண்டு கொண்ட ஜெயந்தி நடராஜன் எம்.பி., தாங்க முடியாத அதிர்ச்சியும், துயரமும் அடைந்து கதறினார். இதற்குள் காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் அந்த இடத்திற்கு ஓடிவந்தனர். ராஜீவ் உடலைப்பார்த்து அலறித்துடித்தனர்.
வ்
ராஜீவ் காந்தி இறந்துவிட்டார் என்ற செய்தி டெல்லியில் இருந்த சோனியா காந்திக்கு இரவு 12 மணி அளவில் தெரிவிக்கப்பட்டது. அவர் அதிர்ச்சியால் உறைந்து போனார். ராஜீவ் காந்தியின் ஒரே மகன் ராகுல் அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் உடனடியாக விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டார். சோனியாவும், மகள் பிரியங்காவும் தனி விமானம் மூலம் சென்னைக்கு விரைந்தனர். இதற்கிடையே ராஜீவ் காந்தியின் உடல் வேன் மூலம் சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டது. அங்கு உடல் பரிசோதனை நடந்தது. டெல்லிக்கு கொண்டு செல்லப்படுவதற்காக பெட்டியில் வைக்கப்பட்டது.
ragiv gandhi6
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து வந்தது. கவர்னர் பீஷ்மநாராயண் சிங் ஆஸ்பத்திரிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் ராஜீவ் உடல் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு கொண்டு போகப்பட்டது. டெல்லியில் இருந்து சோனியாவுடனும், பிரியங்காவுடனும் புறப்பட்ட தனி விமானம் சென்னை வந்து சேர்ந்தது. ராஜீவ் காந்தி உடலைப் பார்த்து சோனியாவும், பிரியங்காவும் கதறித்துடித்தனர். பின்னர் அவர்கள் வந்த தனி விமானத்திலேயே ராஜீவ் உடல் டெல்லிக்கு கொண்டு போகப்பட்டது.
சோனியாவும், பிரியங்காவும் காங்கிரஸ் தலைவர்களும் உடன் சென்றார்கள். டெல்லிக்குக் கொண்டு போகப்பட்ட ராஜீவ் காந்தியின் உடல் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆபரேஷன்கள் மூலம் உடலை டாக்டர்கள் சீரமைத்தனர். பின்னர் ராஜீவ் காந்தியின் வீட்டுக்கு உடல் கொண்டு போகப்பட்டது. அங்கு சிறிது நேரம் வைத்திருந்துவிட்டு பொதுமக்கள் இறுதி மரியாதை செலுத்துவதற்காக தீன்மூர்த்தி இல்லத்துக்கு (பண்டித நேரு வசித்த வீடு) கொண்டு போய் வைத்தார்கள்.
இதற்கிடையில் அமெரிக்காவில் இருந்து ராகுல் டெல்லி வந்து சேர்ந்தார். தந்தையின் உடலைக்கண்டு அலறித்துடித்தார். ராஜீவ் உடல் அருகே சோனியாவும், பிரியங்காவும் துயரமே உருவாக அமர்ந்திருந்தனர். சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார். பிரதமர் சந்திரசேகர் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ராஜீவ் மரணத்துக்கு அனுதாபம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பது என்றும், அரசு மரியாதையுடன் ராஜீவ் உடலை தகனம் செய்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர், பூடான் மன்னர், அமெரிக்க துணை ஜனாதிபதி, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மற்றும் உலகப் பிரமுகர்கள் பலர் வந்திருந்து இறுதி மரியாதை செலுத்தினர். 23-ந்தேதி பிற்பகல் இறுதி ஊர்வலம் நடந்தது. முப்படை தளபதிகள், ராஜீவ் உடலை சுமந்து வந்து பீரங்கி வண்டியில் வைத்தார்கள். பிரதமர் சந்திரசேகர், முன்னாள் ஜனாதிபதி ஜெயில்சிங் மற்றும் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பிறகு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ராஜீவ் உடலை தகனம் செய்ய, இந்திரா காந்தி சமாதி இருக்கும் சக்தி ஸ்தலத்தில் தகன மேடை அமைக்கப்பட்டிருந்தது. மாலை 4.45 மணிக்கு இறுதி ஊர்வலம் அந்த இடத்தை அடைந்தது. ராஜீவ் உடலை ராகுல், நடிகர் அமிதாபச்சன் மற்றும் உறவினர்கள் தூக்கி வந்து தகன மேடையில் வைத்தார்கள். உடல் மீது சந்தனக் கட்டைகள் அடுக்கப்பட்டு, வைதீக சடங்குகள் நடந்தன.
ragiv gandhi
பிறகு “சிதை”க்கு ராகுல் தீ மூட்டினார். மைதானத்தில் திரண்டிருந்த பொதுமக்கள் கண்ணீர் விட்டு அழுதார்கள். மறுநாள் ராஜீவ் காந்தி அஸ்தி 34 கலசங்களில் சேகரிக்கப்பட்டது. அலகாபாத்தில் கங்கையும், யமுனையும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திலும், இமயமலை சாரல் உள்பட இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் கரைப்பதற்காக அஸ்தி கலசங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
திரிவேணி சங்கமத்துக்கு சோனியா காந்தி சென்றிருந்தார். ராஜீவ் காந்தி அஸ்தி சென்னைக்கு கொண்டு வரப்பட்டு ராஜாஜி மண்டபத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர், ரெயில் மூலம் கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)