செப்டம்பர் 05 : "ஜின்னா - இந்தியா, பிரிவினை, சுதந்திரம்" என்ற பெயரில் வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் எழுதியதை அடுத்து பாஜகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. பாஜகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பம் நாட்டுக்கு நல்லதல்ல என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மன்மோகன் சிங் கருத்து தெரிவிக்கும் அளவு பாஜக நிலைகுலைந்தது. ஜஸ்வந்த் சிங் அந்த புத்தகத்தில் அப்படி என்னதான் கூறியுள்ளார் என்பதை இந்நேரம்.காம் வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்.ஜின்னா, இந்தியராக இருந்தார். இந்திய மண் தான் அவரை பெரும் தலைவராக உருவாக்கியது. ஒருங்கிணைந்த இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பாடுபட்டுள்ளார்.
· சிறுபான்மையினர் என்ற கோஷம், பிரிவினைக்காகவே எழுப்பப்பட்டது. ஜின்னா பெடரல் அமைப்புடன் கூடி இந்தியா அமைய விரும்பினார். முஸ்லிம்கள் தனி அதிகாரத்துடன் வாழ விரும்பினார். இந்த கோஷம், படிப்படியாக எல்லா மட்டங்களிலும் பரவி, ஐக்கிய இந்தியா என்ற பெரிய மாளிகையை தகர்க்கும் அபாயத்துக்கு போனது. இதற்கு தீர்வு என்ன? "பிரிவினை ஒன்று தான் வழி' என்கிறார் ஜின்னா. நேரு, வல்லபாய் படேல் மற்றும் காங்கிரசில் உள்ள தலைவர்கள் இதற்கு ஒப்புக்கொள்கின்றனர். இப்படித்தான் பாகிஸ்தான் உதயமானது.
· ஜின்னா இந்துக்களையோ, இந்து மதத்தையோ எதிர்க்கவில்லை; காங்கிரஸ் கட்சியைத் தான் எதிர்த்தார். அதுதான் முஸ்லிம் லீகின் உண்மையான எதிரியாக திகழ்ந்தது. பீகார் உட்பட சில மாநிலங்களில் இந்து - முஸ்லிம் கலவரங்கள் உருவானபோது, முஸ்லிம்களை காக்க காங்கிரஸ் அரசு தவறிவிட்டது என்பதை நிரூபித்தார் ஜின்னா. அப்போது தான், இந்து ராஜ்யம் உருவாக்கப்படுமோ என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.
· அவருடன் நான் பலமுறை உரையாடியதில் அவர் இந்துக்களுக்கு எதிராகவே இந்து மதத்திற்கு எதிராகவோ பேசியதில்லை.
· அவரது எதிர்ப்பு, போகப்போக தான் வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டது. அதிலும், காங்கிரஸ் தலைமை மீது அவருக்கு அதிருப்தி வேரூன்ற காரணமாகவும் இருந்தது என்று அவரது தனிச் செயலர் எம்.ஆர்.ஏ. பெய்க் கூறியுள்ளார்.
· இப்படிப்பட்ட பலகட்டங்களில் மதம் என்பது ஒரு பொருளாகவே இருந்ததில்லை. அவர் தன்னை மதவாதி என்று காட்டிக் கொண்டதே இல்லை. பிரிவினைக்கு பின், அவருக்கு அப்படிப்பட்ட தோற்றத்தை பாகிஸ்தான் தந்தது. பாகிஸ்தான், தனி நாடாக ஜின்னா தேவைப்பட்டார். அதுபோல, ஜின்னாவின் தேவைகளை பூர்த்தி செய்ய பாகிஸ்தான் தேவைப்பட்டது என்பதே உண்மை.
· சில கசப்பான உண் மைகளை சொல்லித் தான் ஆக வேண்டும். 1939 முதல் 1947ல் நாடு பிரிவினைக்குள்ளானது வரை பொறுப்பில் இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, நாட்டின் எதிர்காலம் பற்றிய உண்மைத் தன்மையை புரிந்து கொள்ளுதல், பரந்த கண்ணோட்டம், திடமான குறிக்கோள் போன்றவை இல்லாததை சொல்ல வேண்டும்.
· மவுலானா ஆசாத் தன் புத்தகத்தில் எழுதியது போல, பிரிவினையை தவிர்க்க இந்தியா மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இராணுவம், வெளியுறவு, தொலைத்தொடர்பு ஆகிய விஷயங்களில் பெரும் தன்னாட்சி அளித்து தனி மாநிலங்களை அமைத்திருக்கலாம். இந்த யோசனையை மகாத்மா காந்தி ஏற்றார். ஆனால், சர்தார் படேல் ஏற்கவில்லை.
· இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்றும் இன்று தனிநாடுகள். அடிப்படையில் சில விஷயங்களை மறக்க முடியாது. கடந்து போனது, கடந்ததாகவே எண்ணினாலும், மறைந்து விடாது. புதிதுபுதிதாக விஷயங்கள் உருவாகி, புதிதாக தகவல் வெளிவரத்தான் செய்யும்.
thanks
ReplyDelete