சென்னை, ஜனவரி 25 : தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.
நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும். அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்துவிட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம். சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம் .ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம். கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும். அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.
தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி. கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.
சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.
நடவடிக்கை உறுதி
இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது. ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.
யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான். அரசு கோட்டா மூலமான ஹஜ் பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.
கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார். ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12 மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
source from www.muthupettaiexpress.blogspot.com
நமது நிருபர்
ஷேக் அஸ்லம் அஹமது
மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்: ஹஜ் கமிட்டி அறிவிப்பு...
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment