முத்துப்பேட்டை, ஜனவரி 11: குட்டியார் பள்ளி தெருவை சேர்ந்தவர் சேக் முஹம்மது இவரின் உறவினர் முஹம்மது அப்துல் பாசித். இவர்கள் இருவரும் இன்று மதியம் 3.30 மணியளவில் இரு பெண்கள் உட்பட 5 பேரைகொண்ட தனது குடும்பத்தினருடன் அதிரை கடற்கரைதெருவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக டாட்டா நானோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்.
வாகனம் தம்பிக்கோட்டையை வந்தடைந்ததும் அங்குள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு புறப்பட முற்படும்போது இருசக்கர பல்சர் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் வாகனத்தின் கண்ணாடியில் பொறிக்கப்பட்டிருந்த 'மாஷா அல்லாஹ்' என்ற அரபிக் எழுத்துகளில் எச்சிலை துப்பிவிட்டு, வாகனத்தில் இருந்தவர்களிடம் வம்பு இழுத்தாகவும், இதைதொடர்ந்து நிலைமை மோசமாவதை அறிந்துகொண்டு இவர்கள் அங்கிருந்து வாகனத்தை விரைவாக ஓட்டி தப்பித்துள்ளனர். இவர்களை பின்தொடர்ந்த மர்ம கும்பல் மேலும் இருவரை தங்களுடன் சேர்த்துக்கொண்டு மீண்டும் வாகனத்தை இடைமறித்து அதில் இருந்தவர்களை தாக்கி இருக்கின்றனர். அப்போது மர்ம கும்பலில் இருந்த ஒருவர் தனது பாக்கெட்டில் வைத்து இருந்த கத்தியால் வாகனத்தை ஓட்டிச்சென்ற முஹம்மது அப்துல் பாசித்தை நோக்கி குத்த முற்பட்டுள்ளார். உடனே வாகனத்தின் பின்புற இருக்கையில் அமர்ந்து இருந்த இவரின் பெரியம்மா தனது கையால் தடுக்க முயன்றுள்ளார். மர்ம கும்பல் அவரின் கையில் அணிந்துள்ள 2 பவுன் மதிப்புள்ள செயினை பறித்துள்ளதாக தெரிகிறது.
பெரும் அசம்பாவிதம் நடக்க இருப்பதை எண்ணிய இவர்கள் பெரும் அச்சத்துடன் வாகனத்தை அதிரைக்கு ஒட்டி வந்துள்ளனர். இதை தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து சேக் முஹம்மது அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுகொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரித்தனர். மேலும் புகார் குறித்து விரைவாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.
ஒன்றிணைந்த அதிரை சமுதாய அமைப்புகள் :
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட அதிரை நகர SDPI, த.மு.மு.க, TNTJ ஆகிய சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் அதிரை இளைஞர்கள் காவல் நிலையத்திற்கு திரண்டு வந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் பாதிக்கப்பட்டோருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.
பொதுமக்களின் எதிர்பார்ப்பு :
குறிப்பிட்ட அந்த பகுதியில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாகவும், இந்த பகுதியில் வாழும் இரு சமுதாய மக்கள் காலங்காலமாக அன்னியோன்யமாக வாழ்ந்து வருகின்றனர் என்றும், இவர்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாக சமூக விரோதிகள் சிலர் இதுபோன்ற காரியங்களில் அவ்வப்போது ஈடுபடுவதாகவும், இதற்கு காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராதவாறு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே அங்கே கூடியிருந்த பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
களத்திலிருந்து அதிரை நியூஸ் குழு
0 comments:
Post a Comment