தஞ்சாவூர், ஜனவரி 05: தஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகர மனித நேய மக்கள் கட்சி தலைவராகவும், மாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள 31 ஏக்கர் நிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து வந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.
இன்று அதிகாலை சையத் ஜமாலூதீன் பூ வியாபாரத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு புறப்பட்டு வந்தார். வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் உள்ள பூக்களையும் பறித்து கொண்டு சென்றார்.
பட்டுக்கோட்டை பைபாஸ் சாலை அருகே சென்ற போது 2 பேர் கும்பல் அவரை வழி மறித்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு விழுந்த அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இந்த கொலை குறித்து தஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 2 பேர் தஞ்சை தாலுகா போலீசில் சரண் அடைந்தனர்.
அவர்களிடம் விசாரித்த போது சையது அமீர் என்பவரது மகன்கள் சையது உசேன் (47), சையது பாபு(42) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சையத் ஜமாலூதீன் உறவினர்கள் ஆவார்கள்.
வக்பு வாரிய சொத்தை பரமாரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் அவரது உறவினர்கள் வக்பு வாரிய சொத்தை விற்க முயன்றதை தட்டிக் கேட்டதால் இந்த கொலை நடந்துள்ளது.
கொலையாளி சையது உசேன் சென்னை தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
சையது பாபு விவசாயம் செய்து வருகிறார். கைதான 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீனுக்கு அலிமா என்ற மனைவியும், சையத் காதர் என்ற மகனும், நசீனா பானு, பர்வீன் பானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. அவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.
மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.
0 comments:
Post a Comment