முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

கலைஞருக்கு பகவத் கீதை கொடுத்த ராமகோபாலன் -கீதையின் மறுபக்கத்தைதிருப்பி கொடுத்த கலைஞர் !!!

ஒரு முறை இந்து முன்னணியின் தலைவர் இராம.கோபாலன், முதலமைச்சர் கலைஞரைச் சந்திக்கச் சென்றபோது, பகவத் கீதை நூலினை அவருக்குப் பரிசாக அளித்தார். புன்னகையுடன் அதைப் பெற்றுக் கொண்ட கலைஞர், சந்திப்பு முடிந்து இராம.கோபாலன் விடை பெற்றபோது, தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதியுள்ள ‘கீதையின் மறுபக்கம்’ நூலை அவருக்குத் தன் பரிசாக அளித்தார். கோபாலபுரம் இல்லத்திற்குள் கீதையோடு சென்ற இராம.கோபாலன், கீதையின் மறுபக்கத்தோடு வீடு திரும்பினார்.
இது வெறும் ஒரு நிகழ்ச்சியன்று. ஏடறிந்த தமிழின வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் எழுதப்பட்டுள்ள வருண முரண்பாடே இது! காலகாலமாய் நடைபெற்று வரும் சித்தாந்த வேறுபாடுகளுக்கிடையிலான மெளன யுத்தம்!
ஏசு பிறப்பதற்கு ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இப்போர், இன்று வரை வெவ்வேறு வடிவங்களில் நடந்து கொண்டே இருக்கிறது. தமிழகத்தின் பண்டைய மதங்களை, வேதங்களை ஏற்றுக்கொண்ட வைதீக மதங்கள் என்றும், வேதங்களை மறுத்த அவைதீக மதங்கள் என்றும் வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். இரண்டிற்குமிடையே நடந்த இணக்கமற்ற போர், இந்திய வரலாறாய் இன்று விரிந்துள்ளது.
இந்து மதத் தத்துவ நூல்கள் அனைத்தும் ஆறு தரிசனங்கள் குறித்துப் பேசும். பூர்வ மீமாம்சம், உத்தர மீமாம்சம், சாங்கியம், யோகம், நியாயம், வைசேடிகம் ஆகிய அந்த ஆறு தரிசனங்களும், வேதங்களையும், வேத மரபுகளையும் ஏற்ற பழைய வைதீக மதங்கள் ஆகும். லோகாயுதம், ஆசிவகம், பெளத்தம், சமணம் ஆகிய நான்கு மதங்களும், வேதங்களை மறுத்த அவைதீக மதங்கள் என அழைக்கப்பட்டன. பெளத்த மதம், ஆத்மா என்ற கோட்பாட்டையும் மறுத்து, ‘ அனாத்மம் ’ என்னும் கொள்கையை வெளிப்படுத்தியது.
பிரம்மமும், ஆன்மாவும்தான் எல்லாம் என்று பேசின உபநிடதங்கள். அவை இரண்டு மட்டுமே நிலையானவை என்றன. உலகில் நிலையானது என்று எதுவுமே இல்லை என்று ‘ அநித்தியவாத’த்தை முன் வைத்தது பெளத்தம். “ஓடும் ஆற்றில், இந்தக் கணம் நாம் பார்க்கும் எந்த ஒரு நீர்த்துளியும், அதற்கு முந்திய கணத்தில் நாம் பார்த்தது இல்லை. அவ்வாறே, எரியும் நெருப்பில், ஒவ்வொரு கணமும் புதிய புதிய பொறிகளே வந்து கொண்டிருக்கின்றன. தோற்றத்தில் ஒன்று போலத் தெரிகிறதே அல்லாமல், எல்லாம் வேறு, வேறு. அனைத்தும் மாறிக் கொண்டும், கழிந்து கொண்டும் இருக்கின்றன. நிலையானது எதுவுமில்லை” என்றார் புத்தர். இந்த அநித்தியவாதம், ஆன்மவாதத்திற்கு நேர் எதிரானதாக அமைந்தது.
பார்ப்பனீயத்திற்கும், பெளத்தத்திற்குமான போர் தொடங்கிற்று. பார்ப்பனீயம் முன்வைத்த வேதங்களோ கடவுளர் பலரை முன்வைத்தது. இந்திரன், சோமன், அக்னி, வாயு என்று பல கடவுள்களை அங்கு பார்க்க முடியும். இந்தக் ‘கடவுள் பன்மை’, அனைவரையும் ஒரு குடையின் கீழ்த் திரட்டுவதற்கு இடையூறாக இருந்தது. பல தெய்வ வழிபாட்டிலிருந்து, பெருந்தெய்வ வழிபாட்டிற்கு வைதீக மதம் நகர்ந்தது.
சிவன், திருமால் என இரு பெருந் தெய்வங்கள் தோன்றினர். எனினும், ஒரு மதமென்றால், ஒரு கடவுள், ஒரு புனித நூல், ஒரு வாழ்க்கை முறை என்று எல்லாம் ‘ஒருமையில்’ இருப்பது, வலிமை சேர்க்கும் என்ற எண்ணம் வந்தபோதுதான், ‘பகவத் கீதை’ உருவாக்கப்பட்டது.
புதிதாக ஒரு தத்துவத்தை மக்களிடம் கொண்டு செல்வது கடினம். எனவே, காலகாலமாக மக்களிடையே பேசப்பட்டுவரும் ‘மகாபாரத’க் கதையின் ஊடே, இடைச் செருகலாகக் கி.பி.6ஆம் நூற்றாண்டில், பகவத் கீதை சேர்க்கப்பட்டது. பாலாதித்ய குப்த அரசன் காலத்தில், இது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
பகவத் கீதையில், மேலே நாம் குறித்துள்ள, ஆறு தரிசனங்கள் குறித்த விவாதங்கள் இடம்பெற்றுள்ளன. அவைதீகக் கோட்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. நான்கு வருணங்களையும், தாமே படைத்ததாகக் கிருஷ்ணர் கூறுகின்றார். எனவே அந்தந்த வருணங்களுக்கு உரிய கடமைகளை அவரவர் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பலனை எதிர்பார்க்கக் கூடாது என்றும் கீதை வலியுறுத்துகின்றது.
அதனால்தான், பல்லவர் காலம் தொடங்கி, அதனை ஒரு சட்ட நூல் போலவே பாவித்துள்ளனர். சத்தியப் பிரமாண நூல்களாக, மனுநீதியும், பகவத் கீதையும் பயன்படுத்தப்பட்டுள்ள செய்தியை, ‘பல்லவர் செப்பேடுகள் முப்பது’ மற்றும் ‘பாண்டியர் செப்பேடுகள் பத்து’ ஆகியன நமக்குத் தெரிவிக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே, அண்மைக் காலம் வரை, நீதிமன்றங்களில், பகவத் கீதை நூலின் மீது சத்தியம் வாங்கும் பழக்கம் இருந்தது.
சட்டநூல் என்பதையும் தாண்டி, ‘இந்துக்களின் புனிதநூல்’ என்னும் நிலைக்குக் கீதை உயர்த்தப்பட்டது. திருமாலை மறுத்துச் சிவனை வழிபடும் சைவர்களுக்கும் சேர்த்தே கீதை புனித் நூலானது. இந்து மத ஒற்றுமையைக் கட்டி எழுப்புவதற்காகச் சைவர்கள் பலரும் கூட இக்கோட்பாட்டைக் காலப்போக்கில் ஏற்கத் தொடங்கினர்.
பகவத் கீதையில், உலக நடப்புகள் அனைத்திற்கும் காரணமானவராகக் கிருஷ்ணர் காட்டப்படுகிறார். உபநிடதங்கள் ‘பிரம்மம்’ என ஒரு முழுமையை (absolute) ஏற்படுத்திக் காட்ட முயன்றன. ஏறத்தாழ அந்நிலைக்குக் கிருஷ்ணன் கீதையில் கொண்டுவரப்படுகின்றார். ‘ஆக்குபவன் நானே, ஆக்கப்படுபவன் நானே, கொல்பவன் நானே, கொல்லப்படுபவனும் நானே’ என்பது போன்றதோர் ‘ஒருமை வாதம்’ (ஏகம்) அங்கு நிலைநிறுத்தப்படுகிறது. இந்துக் கடவுள் தத்துவம் அனேகத்திலிருந்து ஏகத்தை நோக்கி நகர்கிறது.
இது எவ்வளவு செயற்கையானது என்பதை, மகாபாரதம் படித்தவர்கள் அறிவார்கள். பாரதம் நெடுக இடம் பெற்றுள்ள கண்ணன் பாத்திரத்திற்கும், பகவத் கீதை காட்டும் கண்ணன் பாத்திரத்திற்கும் தொடர்பே இல்லை.
மகாபாரதக் கண்ணன், ஒரு சாதாரணப் பாத்திரம். அக்காப்பியத்தில் இடம்பெறும் சிசுபாலன் போன்ற சிறு பாத்திரங்கள் கூடக் கண்ணனைக் கேலி பேசுவதை நாம் பார்க்க முடியும்.
சபா பருவத்தில், தருமன் நடத்தும் ஒரு யாகத்தின் போது, கண்ணனுக்கு முதல் மரியாதை வழங்கப்படுவதைக் கண்டு சிசுபாலன் கனன்று எழுகின்றான். கண்ணனுக்கு என்ன தகுதி உள்ளது என்று கேட்கிறான். பிறகு அந்த இடத்தைவிட்டே வெளிநடப்புச் செய்கிறான்.
சிசுபாலன் கோபத்திற்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. சேதி நாட்டில் நடைபெற இருந்த திருமண நிகழ்வை அவன் அங்கு பேசுகின்றான். சிசுபாலனுக்கும், ருக்மணிக்கும்தான் திருமணம் உறுதி செய்யப்பட்டிருந்தது. திருமண மேடையில் அமர்ந்திருந்த ருக்மணியைக் கண்ணனும், அவன் சகோதரனும் கடத்திக் கொண்டு போய் விட்டனர். பிறகுதான் கண்ணனுக்கும், ருக்மணிக்கும் திருமணம் நடைபெற்றது. தனக்கு உறுதி செய்யப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்ட கண்ணனுக்கு முதல் மரியாதை பெறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது என்பதுதான் சிசுபாலனின் கேள்வி.
கண்ணனுக்கும், ருக்மணிக்கும் பத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அதன்பின் கண்ணன் ஏழு அரசிகளை மணந்து கொண்டான். அந்த ஏழு பேருமே, ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் என்பது வேறு செய்தி. இவர்களை எல்லாம் தாண்டி, பதினாயிரம் கோபியர்களோடு கொஞ்சிக் குலாவுதல், கண்ணனுக்குப் பிடித்தமான பொழுதுபோக்கு. இத்தனைக்கும் மேலே, கண்ணனின் காதலி யாரென்றால், அது ராதை மட்டும்தான். அதனால்தான் ‘ராதாகிருஷ்ணன்’ என்று ஊருக்கு ஊர் நாம் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறோம். கட்டிய மனைவியின் பெயரைச் சேர்த்து, ருக்மணிகிருஷ்ணன் என்று பெயர் வைத்துக் கொள்கின்றனரா என்று தெரியவில்லை.
கண்ணன் பற்றிய இந்தச் செய்திகளை, அய்யா
பெரியாரோ, அண்ணல் அம்பேத்கரோ எழுதவில்லை. அனைத்தும், மகாபாரதத்திலும், கண்ணன் பற்றிய புராண நூல்களிலும் உள்ளன.
எனவே இப்படிச் சாதாரணமான ஒரு பாத்திரத்தை, சர்வ வல்லமை கொண்ட கடவுள் பாத்திரமாகச் செய்து முடித்ததன் நோக்கம், ஒன்றே ஒன்றுதான். கடவுளின் மூலமாகவே வருணாசிரம தர்மத்தை இங்கு நிறுவுதல்தான் நோக்கம். அதற்காகவே, கீதை புனித நூலாக ஆக்கப்படுகின்றது.
அந்தப் ‘புனித நூலை’த்தான் இராம.கோபாலன் கலைஞருக்குப் பரிசளிக்கின்றார். புனிதங்களையும், நிலையானது என்னும் கோட்பாடுகளையும் மறுத்த அவைதீகப் போக்குகளின் தொடர்ச்சிதான், தமிழ்நாட்டில் தோன்றிய திராவிட இயக்கம். அதனால்தான், திராவிட இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர், கீதையின் மறுபக்கத்தைத் தன் பரிசாக அளித்தார்.
இப்போது தெளிவாகி விட்டதல்லவா! அன்று நடந்தது வெறும் நிகழ்ச்சியன்று. அது ஏடறிந்த தமிழின வரலாற்றின் எல்லாப் பக்கங்களிலும் பதிவாகிக் கிடக்கின்ற வருண வேறுபாடு!
எழுத்தாளர்: சுப.வீரபாண்டியன்

0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)