முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

நாகூர் ஹனீபா ஓர் வரலாற்று பார்வை




1560458_3812132679690_363324455_n


சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா. நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர்.



தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத பெருநாள்கள் இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை.


தற்போது 89 வயதைத் தொட்டிருக்கும் அந்த மகத்தான கலைஞரின் வாழ்க்கைப் பாதையை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும். இராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் 1925 டிசம்பர் 25 ஆம் நாள் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனீபா.

இஸ்மாயில் முஹம்மது ஹனீபா என்பது இயற்பெயர். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனீபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது. இசை உலகில் பிரபலமானவுடன் ‘இசைமுரசு’ எனும் அடைமொழியும் அப்பெய ரோடு இணைந்தது.

சிறு வயதிலிருந்தே ஹனீபா பாடத் தொடங்கி விட்டார். நாகூரில் அவர் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பள்ளிக்கூடத்தில் இறைவணக்கம் பாடியதுதான் அவரது முதல் பாடல் அனுபவம். அதன்பிறகு, திருமண நிகழ்ச்சிகளின்போது நடைபெறும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலங்களில் பாடினார் ஹனீபா.

1930 களில் பிரபலமாக இருந்த உருதுப் பாடகர்கள், காலு கவால்; பியாரு கவால் மற்றும் தமிழ் பிரபலங்களாகிய கே.பி.சுந்தராம்பாள், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் ஆகியோரின் பாடல் களால் ஈர்க்கப்பட்டார்.

வடமாநிலங்களில் அக் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ‘சைகால்’ என்ற பாடகரின் காந்தாரமான குரலும், தியாகராஜ பாகவதரின் உச்சஸ்தாயி சஞ்சாரமும் ஹனீபாவை ஒருசேர ஈர்த்தபோதும் யாருடைய பாணியையும் பின்பற்றாமல் தமக்கென தனியொரு பாணியை உருவாக்கிக்கொண்டார்.

1941 ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டம் தேரிழந் தூரில் ஒரு திருமண நிகழ்வில் இசைக்கச்சேரி செய்ய ஹனீபாவுக்கு வாய்ப்புக் கிடைத்தது. வெளியூர் சென்று இசைக் குழுவினருடன் ஹனீபா செய்த முதல் கச்சேரி அது. முறையாகப் பணம் பெற்றுக்கொண்டு செய்த கச்சேரியும் அதுவே. 25 ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஹனீபா அந்தக் கச்சேரியை நடத்தியபோது அவருக்கு வயது 15.

ஹனீபா முறையாக சங்கீதம் கற்றவர் அல்லர். அவரது எடுப்பான குரல் இயற்கையாகவே அமைந்தது. 1954 இல் அவரது பாடல்கள் இசைத் தட்டில் பதிவாயின. இலங்கை கம்பலையில் வாழ்ந்த நல்லதம்பி பாவலர் எழுதிய ‘சின்னச் சின்னப் பாலர்களே! சிங்காரத் தோழர்களே!’ என்று தொடங்கும் சிறுவர்களுக்கான அறிவுரைப் பாடலும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு’ என்ற உணர்ச்சிப் பாடலும் ஒரே இசைத்தட்டில் பதிவாகி முதன் முதலில் வெளிவந்தது.

ஹனீபா ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். பல்லாயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1940களில் தொடங்கி 2006 வரை சுமார் 65 ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கச்சேரிகள் செய்துள்ளார். எந்த இசைக் கலைஞரும் செய்யாத அரிய சாதனை இது.

உலக நாடுகள் பலவற்றிலும் ஹனீபாவின் இசை முழக்கம் அரங்கேறியுள்ளது. இலங்கையில் தொடங்கிய அவரது உலக இசைப்பயணம், சிங்கப்பூர், மலேசியா, துபாய், அபுதாபி, கத்தார், பஹ்ரைன், ஹாங்காங் என தொடர்ந்தது.

ஹனீபாவின் பாடல்கள் சமய சமூக நல்லிணக் கத்துக்கு பெருந்துணை புரிந்துள்ளன. தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஹனீபாவின் தீவிர ரசிகர். மதுரை ஆதீனம் காரில் பயணம் செய்யும் போதெல்லாம் ஹனீபாவின் பாடல்களையே பெரிதும் விரும்பிக் கேட்பாராம். பிரபல எழுத்தாளர் பாலகுமாரன், தமக்குச் சஞ்சலம் ஏற்படும் போதெல்லாம் ஹனீபாவின் பாடல்களைக் கேட்டு மன அமைதி அடைவாராம். திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமியும் ஹனீபாவின் பாடல்களால் ஈர்க்கப்பட்டவர். ஹனீபாவின் பாடல்களைக் கேட்டே தாம் இஸ்லாமிய வரலாறுகளை அறிந்து கொண்டதாகக் கூறுகிறார் அவர்.

ஹனீபா பாடிய ‘எவர் கிரீன்’ பாடலான ‘இறை வனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை’ என்ற பாடல், மத வேறுபாடு களைக் கடந்து இந்து மற்றும் கிறித்தவ வீடுகளி லெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அப்பாட லுக்கு மணிக்கணக்கில் சிலேடை நயத்தோடு விளக்கம் சொல்வாராம் கிருபானந்த வாரியார். ‘அப்பா ஹனீபா! நீ பாடகன் அல்லவப்பா; நீ பாட்டுக்கே தலைவனப்பா!’ என்று உளமாற ஹனீபாவைப் பாராட்டியுள்ளார் வாரியார்.

திரைத்துறையிலும் தடம் பதித்தவர் ஹனீபா. குலேபகாவலி திரைப்படத்தில் ஜிக்கி மற்றும் எல்.ஜி.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து, ‘நாயகமே நபி நாயகமே’ என்ற பாடலைப் பாடினார். பின்னர் பாவமன்னிப்பு படத்தில் டி.எம்.சௌந்தரராஜனோடு இணைந்து ‘எல்லோ ரும் கொண்டாடுவோம்’ என்ற பாடலையும், செம்பருத்தி படத்தில் ‘நட்ட நடு கடல் மீது’ என்ற பாடலையும், ராமன் அப்துல்லா படத்தில் ‘உன் மதமா என் மதமா’ என்ற பாடலையும் மேலும் பல திரைப்பாடல்களையும் பாடியுள்ளார்.

பெரியார் பற்றி ஹனீபா நிறைய பாடியுள்ளார். பெரியாரைப் பற்றிய பாடல் ஒன்றை முதன்முதலில் இசைத் தட்டில் பதிவு செய்தவரும் ஹனீபா தான். ‘பேரறிவாளர் அவர் பெரியார் என்னும் ஈ.வெ.ரா.. தூங்கிக் கிடந்த உன்னைத் தூக்கித் துடைத்தணைத்து தாங்கித் தரைமேல் இட்டார்
தமிழர் தாத்தாவாம் ஈ.வெ.ரா.வே!’ என்பதே அந்தப் பாடல். 1955 ஆம் ஆண்டு இப்பாடலின் இசைத்தட்டு வெளிவந்தது.

அண்ணாவைப் பற்றி ஹனீபா பாடிய ‘அழைக்கின்றார்.. அழைக்கின்றார் அண்ணா’ எனும் பாடல் தி.மு.க.வின் கருத்தியலை பட்டி தொட்டியெங்கும் பரப்பிய பாடலாகும். 1955ஆம் ஆண்டு அப்பாடல் இசைத்தட்டில் வெளிவந்து உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. முதலில் அப்பாடலைப் பதிவு செய்ய HMV இசைத்தட்டு நிறுவனத்தார் மறுத்து விட்டனர். இஸ்லாமியப் பாடல்களைப் பாடுமாறு கூறினர். ‘இந்தப் பாடலைப் பதிவு செய்யவில்லையெனில், நான் வேறு பாடல்கள் பாட மாட்டேன்’ என ஹனீபா மறுத்துவிட்டார். அதன்பிறகே பாடலைப் பதிவு செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் இசைத்தட்டு விற்பனை விவரத்தை HMV நிறுவனத்தார் அறிவிப்பது வழக்கம். அந்த ஆண்டில் ‘அழைக் கின்றார் அண்ணா’ என்ற இசைத்தட்டுதான் விற்பனையில் சாதனை படைத்தது. HMV அப்பாடலை பதிவு செய்தது குறித்து அண்ணா வியந்தார். இசைத்தட்டு விற்பனை உச்சத்துக்குச் சென்றதைக் கண்டு HMV நிறுவனம் வியந்தது.

ஹனீபாவின் பாடல்கள் இசைத் தட்டிலிருந்து ஆடியோ கேசட்டாகி, சி.டி.யாகி, இன்று லேப்டாப், ஐபேட் என்று பரிணாமம் பெற்று உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இணையத்தில் நாகூர் ஹனீபா என்று தட்டினாலே அவரது பாடல்கள் வந்து குவிகின்றன. அவரது கச்சேரிகளின் வீடியோ காட்சிகளும் ஏராளமாகக் காணக் கிடைக்கின்றன.

ஹனீபாவின் வளர்ச்சியும், வெற்றியும் தமிழக முஸ்லிம்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கிராமங்களில் சிறுவர்கள் ஒன்றுகூடி மணல்மேடை அமைத்து ஹனீபா போல் வேடம் அணிந்து கச்சேரிகள் நடத்தும் அளவுக்கு அவர் பிரபலமானார். ஹனீபாவின் பாணியைப் பின் பற்றி அவரது பாடல்களையே பாடக்கூடிய ஏராளமான பாடகர்கள் உருவாயினர்.

ஹனீபா உயிரைக் கொடுத்துப் பாடியிருக்கிறார்; இரத்த வாந்தி எடுக்குமளவுக்குப் பாடியிருக்கிறார். உச்சஸ்தாயியில் பாடிப் பாடியே தமது செவித் திறனை இழந்திருக்கிறார். அவ்வாறு உழைத்து, ஊர் ஊராக அலைந்து சேர்த்த செல்வத்தைக் கொண்டு நாகூரிலும், சென்னையிலும் சொந்த இல்லங்களைக் கட்டினார். நாகூரில் கட்டிய முதல் வீட்டுக்கு ‘கலைஞர் இல்லம்’ என்றும், அதே ஊரில் எழுப்பிய இரண்டாம் வீட்டுக்கு ‘அண்ணா இல்லம்’ என்றும் பெயர் சூட்டினார். சென்னையில் உள்ள வீட்டுக்கு ‘காயிதே மில்லத் இல்லம்’ என்று பெயர் வைத்தார்.

இப்போது ஹனீபா, நாகூரில் தாம் கட்டி எழுப்பிய கலைஞர் இல்லத்தில், ஓர் ஈசி சேரில் சாய்ந்தவாறு ஓய்வில் இருக்கிறார். பூரண ஆரோக்கியத்தோடும், அதே பழைய கம்பீரத்தோடும், குலையாத மன வலிமையோடும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவர் நீடூழி வாழ வேண்டும்!

தொகுப்பு :ஜே ஷேக் பரீத்


0 comments:

Post a Comment

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)